வெறும் 650 கிராம் எடையில் பிறந்த குழந்தை! போராடிய டாக்டர்கள்! பிறகு நேர்ந்த அற்புதம்!

650 கிராம் எடையில் பிறந்த குழந்தையை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சந்தானலட்சுமி க்கு இது இரண்டாவது பிரசவம். குழந்தை வயிற்றில் இருந்த போது அவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். பரிசோதனைக்கு சென்றபோது அது டைபாய்டு காய்ச்சல் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. மேலும் அது வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பரவும் அபாயம் இருந்ததால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.

அப்போது அதன் எடை வெறும் 650 கிராம் மட்டுமே இருந்தது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நுரையீரல் உட்பட எந்த உறுப்புகளும் வளராத காரணத்தால் அந்த குழந்தை மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டது.

நாளொன்றுக்கு 10 மில்லி லிட்டர் அளவிலான தாய்ப்பால் மட்டுமே அந்த குழந்தையால் குடிக்க முடிந்தது. அதுவும் சில மணி நேரங்களுக்கு ஒரு சொட்டு என்ற அளவில்தான் குழந்தையின் வயிற்றில் சென்று சேரும். சுமார் நான்கு மாதங்கள் அந்த குழந்தை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது ‌.

தொடர் சிகிச்சை மூலம் அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகள் வளர்ந்ததுடன், சுவாச பிரச்சனைகளும் சரியாகின. இதையடுத்து தனது குழந்தையுடன் வீட்டிற்கு சென்றார் சந்தானலட்சுமி. தனது குழந்தையின் உயிரை காப்பாற்றிக் கொடுத்த மருத்துவர்கள்தான் கடவுள்கள் என உருக்கமுடன் தெரிவித்துள்ளார் சந்தானலட்சுமி.