தஞ்சை மருத்துவக்கல்லூரி புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறப்புகள்!

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சமீபத்தில் பிரதமர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்த செய்தியறிவோம்.


அதில் அமைந்துள்ள துறைகள், வசதிகள் பற்றிய செய்திகளை நாம் அறிந்து கொள்வது நமக்கோ நமக்கு நெருங்கிய நட்பு, உறவினருக்கோ பயனளிக்கும்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இந்த மருத்துவமனை கட்டும் பணி முடிவடைந்து உபகரணங்களும் வந்து விட்டன. தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவிற்கு இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 8.3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 20 ஆயிரத்து 196 சதுர அடி பரப்பளவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இதில் இருதய மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மருத்துவ சிகிச்சை பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை மருத்துவ சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு, வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு, கதிரியக்க அறுவை சிகிச்சை பிரிவு, மயக்கவியல் சிகிச்சை பிரிவு, மருத்துவ ஆய்வகம், ரத்த வங்கி ஆகியவை செயல்பட உள்ளது.

இந்த கட்டிடம் மொத்தம் 5 மாடிகளுடன் 3 பிரிவுகளை கொண்டது. தரைதளத்தில் ரேடியாலஜிதுறை, ரத்த வங்கி, லேப், சமையல்கூடம், சலவைக்கூடம் ஆகியவை உள்ளன. முதல்தளத்தின் ஏ பிரிவு 56 படுக்கைகளும், பி பிரிவு 40 படுக்கைகளும் கொண்டது. 2-வது தளத்தின் ஏ பிரிவு 34 படுக்கைகளும், பி பிரிவு 40 படுக்கைகளும், 3-வது தளத்தின் பி பிரிவு 40 படுக்கைகளும் கொண்டது.

இதே போல் 4 மற்றும் 5-வது தளத்தின் பி பிரிவு தலா 40 படுக்கைகள் என மொத்தம் 290 படுக்கைகள் கொண்டது. இதில் 5 அறுவை சிகிச்சை மையங்களும் அடங்கும்.

இந்த மருத்துவமனையில் தீயணைப்பு பாதுகாப்பு சாதனங்கள் ரூ.80 லட்சத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் ரூ.20 லட்சத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவும், ரூ.50 லட்சத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதியும் இடம் பெற்றுள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதிபடைத்தவர்கள் செல்லலாம்.அரசு மருத்துவமனை என்பதால் தகுதி குறைவானது என எண்ண தேவையில்லை.ஒப்பீட்டளவில் தினமும் நிறைய நோயாளிகளுக்கு சேவை வழங்கும் அரசு மருத்துவர்கள் அனுபவம் மிக்கவர்களாக இருப்பது என்பது இயல்பானது. தஞ்சை மற்றும் அருகாமை மாவட்ட உறவுகளுக்கு பகிருங்கள், பலன் பெற உதவுங்கள்.