கொரோனா வைரஸை அழிக்கவே முடியாதா? விஞ்ஞானிகள் திடுக் தகவல்..! அடுத்து நடக்கப்போவது என்ன?

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப் படவில்லை என்றால் 2022-ஆம் ஆண்டு வரை சமூக விதிகளை கடைபிடிக்க நேரிடும் என்று பிரபல பல்கலைக்கழக ஆய்வறிக்கை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,54,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 22,48,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, "இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகள் திணறி வருகிறது. இதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல. கூடிய விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், அது மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும்.

தடுப்பூசியை தவிர்த்து இந்த நோய் அண்டாமல் இருப்பதற்கான ஒரே தீர்வு சமூக இடைவெளி ஆகும். தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரையிலாவது உலக மக்கள் அனைவரும் இந்த சமூக இடைவெளியை நிச்சயம் பின்பற்றியாக வேண்டும். அப்போதுதான் ஒவ்வொருவரும் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள இயலும்.

மேலும், கூடிய விரைவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், 2022-ஆம் ஆண்டு வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் சூழல் உருவாகும். இந்த வைரஸை அழிக்கவில்லை என்றால் 2025-ஆம் ஆண்டு வரை அதன் தாக்கம் உலகில் இருக்கும்" என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் உலக மக்கள் அனைவரும், சமூக இடைவெளியை பேணி பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.