நினைத்தது நடக்க இந்தக் கோயிலை ஒரு தடவை சுற்றி வந்தால் போதும்! எங்கு உள்ளது தெரியுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரை என்ற ஊரில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான -நந்தீஸ்வரர் கோயில் உள்ளது.


ஒரு காலத்தில் காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த சிவன் கோயிலுக்கு வந்து காளையை அடக்கும்பிடி சிவனிடம் வேண்டினர்.

சிவபெருமான் அந்த காளையை இழுத்துவந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது.

இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால், திருநந்தீஸ்வரம் என இவ்வூருக்கு பெயர் வந்தது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி உள்ளது. காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

இந்த நந்தீஸ்வரர் கோயிலின் விசேஷ அம்சமாகத் திகழ்வது அங்குள்ள நட்சத்திர மண்டபம் ஆகும். இங்கே 27 நட்சத்திர மண்டபம் கொண்ட கண துவாரங்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதை குறிக்கும் வகையில் மண்டபத்தை சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மரக்கட்டைகளில் நட்சத்திரங்களின் அதி தேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தை 27 நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றி வந்தால் ஒரு ஆண்டு காலம் முழுவதும் சிவன் கோவிலைச் சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.