விரல் ஜோதிடம். புதன் விரலை பார்த்தால் கல்யாணம் எப்போதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

நமது உள்ளங்கை சூரியன் முதலான ஒன்பது கிரகங்களுக்குரிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


நடுவில் பிரம்ம ஸ்தானமும் உள்ளது. விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மேட்டிலிருந்து ஆரம்பமாகிறது. அவற்றிற்கு அந்தந்த கிரகத்தின் ஒட்டிய பெயர் உண்டு. சுக்கிரவிரல் - கையின் ஆணிவேர் என்பது கட்டைவிரல். அதனால்தான் கையெழுத்து போட முடியாதவர்கள் கட்டை விரலில் மை தடவி கைநாட்டு போடும் வழக்கம் இருக்கிறது. உலகில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முகஜாடையில் ஒன்றாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் விரல் ரேகைகள் ஒன்றாக இருக்காது.

அதனால் தான் சரியான குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும் கட்டை விரல் ரேகைகள் பயன்படுகின்றன. கட்டை விரல் ரேகைகளை மட்டும் வைத்து கையில் உள்ள மற்ற ரேகைகளின் அமைப்பையும், ஜாதகத்தில் உள்ள கிரக நிலையையும் குறிப்பிட முடியும். தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது கட்டை விரலை மடித்து உள்ளங்கை மீது வைத்து அதை மற்ற விரலால் அழுத்தி கையை மூடிக்கொண்டிருக்கும். இதனால் கையில் உள்ள மொத்த ரேகைகளின் பிரதிபலிப்பும் கட்டை விரலில் பதிவாகி விடுகின்றன.

கட்டை விரல் சுக்கிர மேட்டுப்பகுதியில் ஆரம்பிக்கிறது. இதற்கு சுக்கிர விரல் என்று பெயர். இது இரண்டு எலும்புத் துண்டுகளின் சேர்க்கையால் அமைகிறது. கையை ஒட்டிய கீழ்பகுதி மனோபாவத்தையும் நகமுள்ள மேற்பகுதி புத்தி, பலத்தையும் குறிக்கிறது. இந்த விரல் வடமொழியில் அங்குஷ்ட என குறிப்பிடப்படுகிறது. ஒரு மனிதனின் மனோபாவம், உணர்ச்சிகள், சிந்தனைத்திறன், எண்ணங்கள், செயல் திறன் ஆகியவற்றை கட்டை விரல் கட்டுப்படுத்துகிறது. மற்ற விரல்கள் செயல்படும் திறமைக்கும் கட்டை விரலே உதவுகிறது.

குரு விரல் அல்லது பிரகஸ்பதி விரல் – இது கட்டை விரலுக்கு அடுத்துள்ள விரல். உள்ளங்கை குரு மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரலுக்கு குரு விரல் என்று பெயர். இதை சம்ஸ்கிருதத்தில் தர்ஜனி என்கிறார்கள். ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றை இந்த விரல் அமைப்பு குறிப்பிடுகிறது.

சனி விரல் – நடுவிரல் அல்லது பெரு விரல் என்று குறிப்பிடப்படும் இது உள்ளங்கை சனி மேட்டில் உற்பத்தியாவதால் சனி விரல் எனப்படுகிறது. இதை வடமொழியில் மத்தியமா என்கிறோம். ஒருவனது வெற்றி, செல்வம், செல்வாக்கு முதலியவற்றை இந்த விரலின் அமைப்பு விளக்குகிறது.

சூரிய விரல் - சூரிய மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரலை மோதிர விரல், பவித்திர விரல் என்றும் குறிப்பிடுவார்கள். அதனால்தான் பூஜை புனஸ்காரங்கள் செய்யும் பொழுது தர்ப்பையால் ஆன பவித்திரத்தை இந்த விரலில் அணிகிறோம். இதற்கு வடமொழியில் அனாமிகா என்ற பெயர். ஒரு மனிதனின் புகழ், பெருமை இந்த விரலில் அமைப்பால் தெரியும்.

புதன் விரல் - கனிஷ்டிகா என்று குறிப்பிடப்படும் இதை சுண்டு விரல் என்கிறோம். புதன் மேட்டில் இருந்து உற்பத்தியாகும் இந்த விரல் புதன் விரல் எனப்படும். இதன் அமைப்பு திருமணம், குடும்ப வாழ்க்கைப் பற்றிய பல விவரங்களைத் தருகிறது.