பட்டுப்போன மரத்தை துளிர்க்கவைத்த அம்மன்! தீய சக்திகளை விரட்டியடிக்கும் ஸ்ரீவாத்தலை அம்மனை தரிசிக்க வாங்க

தஞ்சையில், குடமுருட்டி ஆற்றை ஒட்டிய ஊரே கண்டமங்கலம்.


திருக்காட்டுப்பள்ளியின் அருகில் அமைந்திருக்கிறது. இது..வளமான இந்த ஊரின் வளமைக்கும் வாழ்வுக்கும் காரணமாக, அவ்வூர் மக்கள், ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மனின் அருளையே குறிப்பிடுகின்றனர்.அம்மன், இவ்வூரில் எழுந்தருளிய வரலாறு மிக அதிசயமானது.

இவ்வூரில், ஒரு முறை பெருமழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. மழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்ததும், வெள்ளத்தில் கரை ஒதுங்கியது ஒரு சிற்பம்.. அம்மனின் திருவுருவமே அது!.. வெகு காலமாக, கிராமத்துக்கென காவல் தெய்வமில்லையே என்று வருந்தியிருந்த அவ்வூர் மக்களின் ஏக்கம் போக்கவே, தன்னை இவ்வாறு வெளிப்படுத்தினாள் அம்மன் என்று சொல்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட அந்த அம்மனை, தங்கள் காவல் தெய்வமாக ஏற்றார்கள் கண்டமங்கலம் ஊரினர்.

ஊரில் முன்பு வாராஹியை வழிபட்டு வந்த இடத்திலேயே, இந்த அம்மனுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. முதலில் திரிசூலி என்றும் லோகேஸ்வரி என்றும் வழிபடப்பட்டாலும், அன்னைக்கு 'வாத்தலை நாச்சியம்மன்' என்ற திருநாமமே நிலைத்தது. இந்த திருநாமம் ஏற்பட்ட வரலாறு தெரியவில்லை. நான்கு கைகளைக்கொண்ட இந்த அம்மன் கிளி, உடுக்கை, பாசக்கயிறு, அன்ன கிண்ணம் என கைகளுக்கு ஒன்றை பிடித்தவாறு அம்சமாய் வீற்றிருப்பது தனி அழகு

விமரிசையாக நித்ய பூஜைகளையும், வருடத்திற்கொரு முறை, காப்பு கட்டி திருவிழாவும் கொண்டாடி வந்த மக்கள், காலப் போக்கில் விழா எடுக்க மறந்தார்கள். விழா எடுப்பது, பல்வேறு ஆகம காரணங்களை உள்ளடக்கியது. ஊரின் நன்மையே அதில் அடங்கியுள்ளது. அதை அறியாமல், விழா எடுக்க மறந்த தன் மக்கள் செய்த தவறை அவர்களுக்கு எடுத்துக் காட்ட விரும்பினாள் அன்னை.

தல விருட்சமாயிருந்த வேப்பமரம் பட்டுப் போகத் துவங்கியது. ஊரில் ஆங்காங்கே நெருப்பு பற்றத் துவங்கியது. அப்போதும், தம் தவறை உணராத மக்களின் முன்பாக, தன் அருளாடலை வெளிப்படுத்தினாள் அம்மன்.ஒரு நாள், திருக்கோயிலின் உள்ளே,பூசாரியின் ஆராதனைத் தட்டு, காரணம் ஏதுமின்றி பறந்து விழுந்தது.. வழிபட வந்திருந்த பெண்ணொருத்தியினுள்ளே அருட்சக்தியாகப் புகுந்து, விழா எடுக்காததன் விளைவுகளை சுட்டிக் காட்டினாள் அன்னை. .. மக்களின் அறியாமை அகன்றது. விழா எடுப்பதாக, அம்மனின் திருமுன்பு உறுதி கூறினர். அவ்வாறு செய்தால், எட்டு நாட்களில் பட்ட மரம் துளிர்க்கும் என்று அருள் வாக்களித்தாள் அம்மன். விழாவுக்குக் காப்பு கட்டியதும், கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் செய்தருளினாள். எட்டு நாட்களில் பட்ட மரம் துளிர் விட்டது.

கோயிலின் திருச்சுற்றில், ஸ்தல விருட்சமான வேப்ப மரம். மிக அதிசயமானதொரு வேப்பமரம் இது.. இதில் ஆங்காங்கே முண்டும் முடிச்சுமாக இருக்கிறது. அவற்றில், ஒன்றிரண்டிலிருந்து, பளபளவென எதுவோ தெரிகிறது. இதைப் பற்றிய விவரம் அதிசயமானது!.. இத்திருக்கோயிலில் வேண்டுதல் செய்பவர்கள், அது நிறைவேறியதும், மணிகளைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கமிருக்கிறது. ஸ்தல விருட்சத்தில் அடிக்கப்பட்ட மணியை, காலப்போக்கில் மரமே மெல்ல உள்வாங்கி, தன்னுள் மறைத்துக் கொள்கிறது என்கிறார்கள். மரத்தை நெருங்கிப் பார்த்தால், இது உண்மை என்றே புலனாகிறது. பெரும்பாலான மணிகளின் கீழ்ப்புறம் மரத்துக்கு வெளியேயும், மேற்புறம் மரத்துக்குள் மறைந்தும் இருக்கிறது.

வடக்கு நோக்கி அம்மன் வீற்றிருப்பதால் அதிக சக்திகொண்டு ஆங்காரத்தோடவும், ஒங்காரத்தோடவும்தான் எப்பவும் இருப்பதாக கூறுகின்றனர். இதனால பில்லி, சூனியம், ஏவல் போன்ற கெட்ட சக்திகளால் பாதிக்கப் பட்டவங்க, கோயிலின் தலவிருட்சமான வேப்பமரத் தோட அடி மண்ணை எடுத்து அதோட மஞ்சள், வெள்ளை எருக்கு, எலுமிச்சைப் பழத்தை எல்லாம் ஒரு துணியில கட்டி, அம்மனோட காலடியில வெச்சு பூஜை செஞ்சு, அவங்க வீட்டு வாசலில் கட்டினா... பில்லி சூனியமும், கெட்ட சக்திகளும் அந்த வீட்டை நெருங்க முடியாது என்ற நம்பிக்கை நிலவுகிறது.