கணவன் என்னுடன் இல்லை..! ஏற்கனவே ஒரு மகன்..! அதான்..! பெண் குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர பெண்! அதற்கு அவர் கூறிய காரணம்!

பெற்ற குழந்தையை மனிதாபிமானம் இன்றி தாயொருவர் ஆற்றில் வீசிய சம்பவமானது திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருக்கோவிலூர் பகுதியில் தென்பெண்ணையாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றிலிருந்து பச்சிளங்குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்துள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் ஒரு பெண் விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது துணியால் சுற்றப்பட்டு பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. 

உடனடியாக அந்த பெண் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் குழந்தையை பற்றி தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டெடுத்தனர். குழந்தையை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருக்கோவிலூர் காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியிலுள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் குழந்தையின் தாயாரை தேடி வந்தனர். அப்போது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலமானது காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"என்னுடைய பெயர் தீபா. திருக்கோவிலூருக்கு உட்பட்ட மிலாரிபட்டு கிராமத்து சேர்ந்த முத்து என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டேன்‌. எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் சென்னைக்கு வேலைக்கு சென்ற என்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் என்னுடைய கணவரின் தொடர்பை துண்டித்து கொண்டேன். இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமானேன். 15 நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தேன். என்னுடைய உறவினர்கள் கணவர் இல்லாத போது ஏன் குழந்தையை பெற்றெடுத்தாய் என்று என்னை அசிங்கப்படுத்தினர். இதனால் வேறு வழியின்றி குழந்தையை ஆற்றில் வீசி விட்டேன்" என்று கூறினார்.

குழந்தை தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையிலிருந்து குழந்தை மீண்ட பிறகு தீபாவுக்கு அறிவுரை கூறி குழந்தை ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.