மகன், மகளுடன் பைக்கில் சென்ற இளம் தாய்! பின்னால் வந்த ஆட்டோ - பஸ்சால் ஏற்பட்ட விபரீதம்! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

சென்னையில் ஆட்டோ மோதி நிலை தடுமாறியதால் அரசு பேருந்தில் சிக்கி தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திரிசூலம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மற்றும் சுதா தம்பதியினர் ஆவர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஷிவானி ( வயது 5) என்ற மகளும் தீபக் ( வயது 2) என்ற ஒரு மகனும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்றையதினம் சுதா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் இணைந்து கோவிலம்பாக்கத்தில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

சுதா தன்னுடைய ஸ்கூட்டியில் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அப்போது வரும் வழியில் கீழ்க்கட்டளை அருகே உள்ள ஈச்சங்காடு மேடவாக்கம் மெயின் ரோடு அருகில் வந்த பொழுது பின்னால் வந்த ஆட்டோ சுதாவின் ஸ்கூட்டர் மீது மோதியது. சுதா நிலைதடுமாறி நடுரோட்டில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கீழே விழுந்தார். 

அவர்கள் கீழே விழுந்தபோது பின்னால் தி. நகரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று சாலையில் விழுந்து கிடந்த சுதா மீதும் அவரது மகள் மீதும் ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுதா மற்றும் அவரது மகள் ஷிவானி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவரது மகன் தீபக் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் உயிரிழந்தது மிகப்பெரிய துயரத்தை தந்திருக்கிறது.

சம்பவம் அறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து துறை காவல் அதிகாரிகள் சுதா மற்றும் ஷிவானி ஆகிய இருவரது உயிரிழந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பேருந்து ஓட்டுனரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.