வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து இறங்கிய 90 ஆயிரம் பேர்! கொரோனா பரவல் அதிகரிக்குமா! திடுக் தகவல்!

பஞ்சாப் மாநிலத்தில் வெளிநாட்டு மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருவதால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 19,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 4,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 562 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயானது வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம் அதிகளவில் தென்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷவர்தன் அவர்களுக்கு நேற்று ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய மாநிலமாக பஞ்சாப் திகழ்கிறது. இங்கு கிட்டத்தட்ட 90,000 வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் இந்த வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் பழகுபவர்களுக்கு இந்த வைரஸை பரிசாக அளிக்கின்றனர். 

இதற்காக மத்திய அரசு உங்களுக்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். இந்த நிதியின் மூலம் நாங்கள் மாநில சுகாதாரத்தை மேம்படுத்தி கொள்ள இயலும். அதுமட்டுமின்றி, பஞ்சாப் மாநிலத்தில் கூடுதல் நிபுணர்கள், மயக்க மருந்து வல்லுநர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களான வென்டிலேட்டர்கள், ஐசியூக்கள் ஆகியன அதிகளவில் தேவைப்படுகின்றன. இதற்கு இந்த ஒதுக்கீடு தொகையானது பெரிய அளவில் பயன்படுத்தப்படும். ஆகவே விரைந்து கேட்கப்பட்ட நிதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.

அவர் கூறியவாறு ஜெர்மனியிலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த முதியவர் ஒருவர் தன்னிடமிருந்த வைரஸை 15 பேருக்கு பரப்பிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.