கர்நாடகாவில் வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்! எத்தனை பேர் பலி தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.


சிவமோகா மாவட்டத்திற்கு உட்பட்ட அரலகோடு எனும் கிராமத்தில் தான் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த கிராமத்தை சேர்ந்த 15 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த 15 பேர் தவிர குரங்கு காய்ச்சலுக்கு 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள அரலகோடு கிராமத்தில் கர்நாடக சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

   அந்த கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குரங்கு காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசி வேகமாக போடப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட காய்ச்சல் வேகமாக பரவுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை உண்மை என்று நம்ப வேண்டாம் என கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. குரங்கு காய்ச்சல் குணப்படுத்தக்கூடியது தான் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  சிவமோகா மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் லங்கூர் குரங்குகள் மற்றும் மக்காக வகை குரங்குகள் மூலம் இந்த காய்ச்சல் பரவுகின்றன. வனப்பகுதியில் இறந்து கிடக்கும் இந்த குரங்குகளின் உடலில் தோன்றும் உன்னிப் பூச்சிகள் மனிதர்களை கடிப்பதால் குரங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஒரு நபருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர் மூலமாக சக மனிதர்களுக்கும் ஏற்படும்.

   குரங்கு காய்ச்சலால் குரங்குகளுக்கும் பாதிப்பு உண்டு. எனவே ஆங்காங்கே செத்துக்கிடக்கும் குரங்குகளை அப்புறப்படுத்தும் பணியிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் கடந்த 1957ம் ஆண்டு முதல் முறையாக குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.