விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் மோடிக்கு மன்னிப்பே கிடையாது… கி.வீரமணி ஆவேசம்.

விவசாயிகள் போராட்டத்தை மக்கள் மன்றமும் உலகமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ள. தன்முனைப்பை கைவிட்டு கீழே இறங்கி வராவிட்டால் மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது என்று கி.வீரமணி ஆவேசம் காட்டியிருக்கிறார்.


டில்லி தலைநகரை முற்றுகையிட்டு கடந்த 25 நாள்களாக கட்டுப்பாட்டுடன் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் - பல்லாயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட உணர்வுடன் ஈடுபட்டு அறவழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய அனுமதிக்காத நிலையில், சுற்றுப்புற புறநகர் எல்லைப் பகுதிகளின் சாலைகளில், தாங்கள் வந்த டிராக்டர்களிலும்,

டெண்ட் அமைத்தும், உணவுகளை அங்கேயே தயாரித்தும், வாட்டும் மைனஸ் டிகிரி கடுங்குளிரிலும், கட்டுக்கோப்பாக வன்முறைக்குத் துளியும் இடந்தராமல், மிகவும் அறவழியில், சட்டம் - ஒழுங்கு, பொது அமைதிக்கு சிறிதும் கேடு ஏற்படுத்தாத வகையிலும் நடைபெற்று வருவதைக் கண்டு உலக நாடுகள் மூக்கில் விரலை வைத்து அதிசயப்படுகின்றன.

அதன் காரணமாக, அனைத்துத் தரப்பினரும் அறவழிப்பட்ட ஆதரவினைத் தந்து, அவர்களது கோரிக்கையின் நியாயத்தின்பால் நிற்கின்றனர்! விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் மூன்று சட்டங்களை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய முறையேகூட தெளிந்த ஜனநாயக முறைக்கு எதிரானது!

இந்த சட்டங்களை எதிர்த்து ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.)யிலிருந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்மித் கவுர்பாதல் பதவியை இராஜினாமா செய்தார் - தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய! SAD என்ற சிரோன்மணி அகாலிதளக் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது!

பா.ஜ.க.வினரும் - பாரதீய கிஷான் சங் அமைப்பும் எதிர்ப்பு!  பல பா.ஜ.க.வினரும், முக்கிய பொறுப்பாளர்களும்கூட எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளின் பக்கம் நிற்கின்றனர்!  அவ்வளவு தூரம் போவானேன், ஆர்.எஸ்.எஸ்.சின் ஓர் அங்கமான (பாரதீய கிஷான் சங்) BKS அமைப்பு இந்தச் சட்டம் விவசாயிகளின் நலனை முழுமையாகப் பாதுகாக்கவில்லை என்று கூறி, திருத்தப்படவேண்டும் என்று பகிரங்கமாகவே கூறுகிறது!

78 முக்கிய ஓய்வு பெற்ற மூத்த அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள், நிர்வாகப் பிரமுகர்கள் இதில் உள்ள ஓரவஞ்சனை, குறைபாடு, அரசமைப்புச் சட்ட விரோத, ஜனநாயக விரோதப் போக்குபற்றி விரிவாக விளக்கி, அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  பஞ்சாபில் வாங்கிய அரசுவிருதுகளைத் திருப்பித் தருவது தொடர்கிறது. இதைவிட மத்திய மோடி அரசுக்கு மிகப்பெரும் அவமானம் வேறு இருக்க முடியாது!

விவசாயிகளுக்கு ஆதரவாக முன்னாள் போர் வீரர்கள் விருதுகளை திருப்பி அளித்துள்ளனர். 25 ஆயிரம் முன்னாள் போர் வீரர்கள் (War Veterans) தங்களது விருதுகளைத் திருப்பி அளித்து - தாங்கள் விவசாயிகளின் பக்கம் நிற்கிறோம் என்று பகிரங்கமாக அறிவிப்பு விடுத்துள்ளனர். இனியாவது வேளாண் சட்டங்களை மாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.