பீகார் To திண்டுக்கல்! மகாநதி திரைப்பட பாணியில் விபச்சார விடுத்தியில் விற்கப்பட்ட சிறுமி! 25 நாட்கள் நிகழ்ந்த விபரீதம்!

பீகார் மாநிலத்தில் இருந்து பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட பள்ளி மாணவி 25 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தின் திண்டுக்கலில் இருந்து மீட்கப்பட்டார்.


தொடர்புடைய சிறுமி கடந்த ஜூன் மாதம் மாயமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மனிஷா குமாரி என்ற பெண் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் போலீசாரை கண்டு மிரண்டு ரயிலில் இருந்து குதித்த பெண்ணின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பெண்ணை வளைத்துப் பிடித்து விசாரித்தபோது அவர் தான் மனிஷா குமாரி என தெரியவந்தது.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது சிறுமியை பிரகாஷ் யாதவ் என்பவரிடம் 400 ரூபாய்க்கு விற்று விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த பிரகாஷ் யாதவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அன்சாரி என்பவரிடம் சிறுமியை விட்டதாகவும் அவர் எங்கு இருப்பார் என தெரியாது என்றும் கூறினார்.

இந்நிலையில் சிறுமியின் தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தனக்கு ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் இல்லையேல் சிறுமியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டினார் இதனால் பதறிப்போன சிறுமியின் தந்தை காவல்துறையினரை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அவருக்கு வந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது அது அன்சாரியின் எண் என தெரியவந்தது மேலும் அந்த எண்ணிலிருந்து அன்சாரி திண்டுக்கல்லில் உள்ள ரஜியா என்ற பெண்ணிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது 

இதையடுத்து தமிழக போலீசாரின் உதவியுடன் பீகார் போலீசார் திண்டுக்கல்லுக்கு சென்று ரஜியாவின் வீட்டில் பார்த்தபோது அங்கு சிறுமி இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர். 25 நாட்களுக்குப் பிறகு அந்த சிறுமி தனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் ரஜியா அன்சாரியின் மனைவி என்று தெரியவந்தது இந்தக் கும்பல் மிகப் பெரிய நெட்வொர்க் ஒன்றை வைத்துக்கொண்டு பல ஆண்டுகளாக பள்ளிச் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.