மறைமுகத் தேர்தல் விவகாரம்! மு க ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கேள்வி!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முறை மறைமுக தேர்தலாக இருக்குமேயானால் அது எவ்வாறு ஜனநாயக சீர்குலைவை ஏற்படுத்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து பேசிய கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்தில் இதுவரை அதிமுக கட்சி சார்பில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் பற்றியும் எதிர்காலத்தில் செய்யவிருக்கும் சாதனைகளைப் பற்றியும் புள்ளிவிபரங்களோடு சுட்டிக்காட்டினார். 

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தகவல்களை எதிர்த்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான பல கருத்துக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார் என்று சர்ச்சையை கிளப்பினார். மு க ஸ்டாலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் நீட் தேர்வானது கடந்த 2012 ஆம் ஆண்டு திமுக மற்றும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டுவரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது .இருப்பினும் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தலைசிறந்த நகரங்களான டில்லி ,கொல்கத்தா, மும்பை போன்ற இடங்களிலும் மேயர் உள்ளிட்ட நகராட்சி தேர்தல்கள் மறைமுகமாகவே நடத்தப்படுகிறது. மேலும் மேயர் உள்ளிட்ட உறுப்பினர்கள் எந்த ஒரு முரண்பாடும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதற்காகவே மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 

ஆகையால்தான் தமிழகத்திலும் மறைமுக தேர்தலை அரசு கொண்டுவர உள்ளது .இதனால் என்ன ஜனநாயக சீர்கேடு ஏற்பட்டு விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.