ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் போது சசிகலாவுக்கு எதிராக எதுவும் கூறாத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓ.பி.எஸ்சை சிக்கலில் சிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெ., மரண விசாரணை ! ஓ.பி.எஸ்சை காட்டிக் கொடுத்து சசிகலாவை காப்பாற்றிய விஜயபாஸ்கர்!

நீதிபதி கேட்ட கேள்விகளுக்கும், சசிகலா
மற்றும் அப்பல்லோ தரப்பினரின் குறுக்கு விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து
பதில் அளித்தேன். மூன்றுமுறை இதற்குமுன் நான் ஆஜராகவில்லை என்பது தவறு. ஆணையம் தான்
நான் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய தேதியை தள்ளி வைத்தது.
ஜெயலலிதாவால் நான் ஆளாக்கப்பட்டேன். ஜெயலலிதாவால்
ஈர்க்கப்பட்ட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தேன். ஜெயலலிதாவின் 75நாள் மருத்துவ சிகிச்சை
தொடர்பான நிகழ்வுகளை கூறியது மனதில் பாரத்தை அதிகரித்தது. ஜெயலலிதாவின் இழப்பு இன்றும்
எனக்கு பெரும் சுமையாக உள்ளது.
இவ்வாறு விஜயபாஸ்கர்
செய்தியாளர்களிடம் கூறிவிட்டு விரைவாக சென்றுவிட்டார். செய்தியாளர்கள் கேள்விகள்
பலவற்றுக்கு பதில் சொல்வதை அவர் முற்றிலுமாக தவிர்த்தார். இதனை தொடர்ந்து
சசிகலா தரப்பு
வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம பேசியவதாவது:
அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை என சி.வி.சண்முகம்
கூறியிருந்த நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அமைச்சரவை கூட்டம்
நடைபெற்றது என விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும்
பங்கேற்றனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவை
வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்வது குறித்து அமைச்சரவைக்கூட்டத்தில் எதுவும்
பேசப்படவில்லை என்றும் அதற்கு முன்னதாக கூட பெயரளவிலேயே அதுகுறித்து பேசியதாகவும்
கூறினார். மேலும் வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதற்கான
தேவை எழவில்லை என்றும் அதற்கான சூழ்நிலையும் இல்லை என்றும் எய்ம்ஸ்
மருத்துவர்களும் வெளிநாட்டு சிகிச்சையை பரிந்துரைக்கவில்லை என்றும் சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
விஜயபாஸ்கர் முன்பு
மறுத்த, பல்வேறு கேள்விகளுக்கு அவரது பதிலை ஒப்புதல் வாக்குமூலமாக பெற்றுளளோம். ஓ.பன்னீர்செல்வம்
குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு விஜயபாஸ்கர் பதிலளிக்க மறுத்தார். ஆனால்
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து ஓ.பி.எஸ்க்கு தெரிவிக்கப்பட்டதாக
விஜயபாஸ்கர் கூறினார்
சுகாதாரத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் சிறிதும் மாறவில்லை.
எய்ம்ஸ் மருத்துவர்கள்
மேற்பார்வை மட்டுமல்ல ஜெயலலிதாவிற்கு சிகிச்சையும் அளித்தார்கள் என்றும் விஜயபாஸ்கர்
கூறினார்.
அரசுத்தரப்பு பிரதிநிதியாகவே
அப்போலோவிற்கு சென்றதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். ஒரு மருத்துவர் என்ற முறையில் தானும் தன்னுடைய
ஆலோசனைகளை அப்போலோ மருத்துவர்களுக்கு வழங்கியதாகவும் விஜயபாஸ்கர் ஆணையத்தில்
குறிப்பிட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது
முதல் இறக்கும் வரை நடந்த அத்தனையும் அப்போது முதலமைச்சர் பணிகளை கவனித்து வந்த துணை
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் திட்டவட்டமாக கூறினார். இவ்வாறு சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா
செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
இதன் மூலம் விசாரணை ஆணையத்தில் சசிகலாவிற்கு
எதிராக விஜயபாஸ்கர் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதே சமயம்
அப்பலோ சிகிச்சை முறைகள் அனைத்தும் ஓ.பி.எஸ்க்கு தெரியும் என்று விஜயபாஸ்கர்
கூறியிருப்பது, இதுநாள் வரை தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று கூறி வந்த
ஓ.பி.எஸ்சின் பேட்டிக்கு எதிராக உள்ளது.
இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வத்தை விசாரணை
ஆணையத்தில் விஜயபாஸ்கர் போட்டுக் கொடுத்ததாகவே கருதப்படுகிறது. அதே சமயம்
சசிகலாவுக்கு எதிராக எதுவும் கூறாமல் அவரை விஜயபாஸ்கர் காப்பாற்றிவிட்டதாகவும்
சொல்லப்படுகிறது.