இந்தியா - பாகிஸ்தான் ராணுவ பலம் ஒப்பீடு!

இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மூண்டுள்ள நிலையில் இரு நாட்டு முப்படைகளின் பலம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.


இந்தியா- பாகிஸ்தான் நாடுகளிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ பலம் குறித்து வாஷிங்டனில் உள்ள சர்வதேச ஆய்வுகள் மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிடம் 130 முதல் 140 அணுகுண்டுகள் உள்ளன என்றும் பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு குண்டுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏவுகணைகளை பொருத்தவரை, இந்தியாவிடம் 5000 முதல் 9000 கிலோ மீட்டர் வரை தாக்குதல் நடத்தும் ஒன்பது வகையான ஏவுகணைகள் உள்ளன.

இந்தியாவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பாகிஸ்தான் வைத்துள்ளது. சீன உதவியுடன் உருவாக்கப்பட்ட குறுகிய, நடுத்தர ரக ஏவுகணைகளும் பாகிஸ்தானிடம் உள்ளன. 

அதிகபட்சமாக 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாயும் ஷாஹீன் தான் பாகிஸ்தான் உச்சவல்லமை கொண்ட ஏவுகணை.

இந்திய ராணுவத்தில் 21.40 லட்சம் வீரர்கள் உள்ளனர். 4426 போர் டாங்கிகள் உள்ளன. 5681 கவச வாகனங்கள், 290 இலகு ரக பீரங்கிகள், 292 ராக்கெட் ஏவும் லாஞ்சர்கள் உள்ளன.

பாகிஸ்தானிடம் 6,53,000 போர்வீரர்கள், 2735 டாங்கிகள், 3066 கவச வாகனங்கள், 325 இலகு ரக பீரங்கிகள், 134 ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன.

இந்தியாவிடம் மொத்தம் 2216 விமானங்கள்,323 போர் விமானங்கள், 329 பல் உபயோக விமானங்கள், 220 தாக்குதல் ரக விமானங்கள், 725 ஹெலிகாப்டர்கள், ஏழு வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களையும், ஆளில்லா ஹெரன் ரக விமானங்கள், விண்ணிலேயே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் என நவீன வசதிகளை கொண்டுள்ளது இந்திய விமானப்படை

பாகிஸ்தான் விமானப்படையில் 1143 விமானங்கள், 186 போர் விமானங்கள், 225 பல் உபயோக விமானங்கள், 90 தாக்குதல் விமானங்கள், 323 ஹெலிகாப்டர்கள் உள்ளன. 

பத்து வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களும் பாகிஸ்தானிடம் உள்ளன.

இந்தியா கடற்படையில் மொத்தம் 214 கப்பல்கள் உள்ளன. இரு விமானம் தாங்கி கப்பல்கள், 16 நீர்மூழ்கிக் கப்பல்கள், 11 அழிக்கும் கப்பல்கள் , 15 சிறிய போர்க்கப்பல்கள், 106 ரோந்து மற்றும் கடற்கரை போர் கப்பல்கள், 75 போர் விமானங்களும் இந்திய கடற்படையில் உள்ளன.

சிறிய கடலோரப்பகுதி கொண்ட பாகிஸ்தானின் கடற்படை மொத்தம் 231 கப்பல்களை கொண்டுள்ளது. 9 போர் கப்பல்கள், 5 நீர்மூழ்கிக் கப்பல்கள், 17 ரோந்து மற்றும் கடலோரக் கப்பல்கள் அங்கு உள்ளன.