என் ஒன்றரை வயது குழந்தை இறந்துவிட்டது..! உடலைக் பார்க்க கூட போகமுடியவில்லை..! இந்தியாவை உலுக்கிய புகைப்படம்! பின்னணி இது தான்!

தனது குழந்தை இறந்து விட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து தன் குழந்தையின் உடலை பார்க்க கூட போக முடியவில்லையே என்று கதறி அழும் தந்தையின் புகைப்படம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.


டெல்லியில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ராம்புகார். இவர் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசாரி என்ற பகுதியை சேர்ந்தவர். இவருக்கு மூன்று பெண் குழந்தையும் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளியான இவர் தற்போது டெல்லியில் சிக்கிக்கொண்டதால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊரில் இருக்கும் தனது மகன் இறந்து விட்டதாக உறவினர்களிடம் இருந்து இவருக்கு தகவல் வந்திருக்கிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராம்புகார் தனது மகன் இறந்த நிலையில்கூட ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த ராம்புகார் என்ன செய்வது என்று தெரியாமல் சாலையோரத்தில் அழுது கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம் காண்போரின் மனதை கலங்க வைத்துள்ளது.

இதைப்பற்றி பி.டி.ஐ நிறுவனத்திடம் பேசிய ராம்புகார் எங்களை போன்ற தொழிலாளர்கள் வாழ்க்கை முடியும் வரை சக்கரத்தில் மாட்டிக்கொண்ட கயிறு போல சுழன்று கொண்டே இருக்க வேண்டும். என்னுடைய ஆண் குழந்தை இறந்த செய்தியைக் கேட்டு மின்னல் தாக்கியது போல எனக்கு இருந்தது. என்னை வீட்டுக்கு செல்ல அனுமதிக்கும்படி காவலர்களிடம் கெஞ்சினேன். ஆனால் யாரும் என்னை அனுமதிக்கவில்லை. ஊரடங்கில் உன்னால் எங்கும் செல்லமுடியாது என காவலர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

எனது குழந்தை இறந்த செய்தியைக் கேட்டு வீட்டிற்கு செல்வதற்கான வழிகளை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஒரு பெண் எனக்கு உதவினார்கள். பத்திரிகையாளர் என்னை காரில் அழைத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கு காவலர்கள் அனுமதி அளிக்கவில்லை. அந்தப் பெண் உணவுக்காக எனக்கு 5500 ரூபாய் கொடுத்து உதவினார். அதுமட்டுமல்லாமல் சிறப்பு ரயிலுக்கான எனது டிக்கெட்டையும் அவர் பதிவு செய்தார். அவரால் தான் என்னால் பீகாருக்கு வர முடிந்தது.

பணக்காரர்களுக்கு எல்லா உதவிகளும் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து அவர்களை அழைத்துவர விமானங்கள் கொண்டு வரப்படும். ஆனால் எங்களைப் போன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டுகொள்ள யாருமில்லை. எங்களுடைய வாழ்க்கையின் மதிப்பு இவ்வளவுதான். எந்த தந்தையாவது தனது குழந்தையின் இறுதி சடங்குக்கு செல்லாமல் இருக்க முடியுமா? ஆனால் நான் இதுவரை என் குடும்பத்தினரை சந்திக்க வில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் இருந்து பெகுசாரை நான் வந்தடைந்தேன். அங்கிருந்த பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்த பின்னர் பேருந்தின் மூலம் நகரத்துக்கு வெளியே உள்ள பள்ளி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். தொடர்ந்து அங்கேயே இருந்து வருகிறேன். எப்போது என் குடும்பத்தாருடன் நான் சந்திக்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. உடல்நிலை சரியில்லாத மனைவியையும் மற்றும் குழந்தைகளையும் எப்போது சந்திப்போம் என்ற ஏக்கத்துடன் அவர் முகாமில் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.