புலம்பெயரும் தொழிலாளர் ஒருவர் ஊரடங்கு உத்தரவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தன்னுடைய கர்ப்பிணி மனைவியையும் மகளையும் தள்ளுவண்டி செய்து கைகளால் இழுத்து கொண்டு நடந்து சென்ற சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
கைக்குழந்தை..! கர்ப்பிணி மனைவி..! 700 கிலோ மீட்டர்..! தள்ளுவண்டி செய்து இழுத்தே சென்ற கணவன்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஊரடங்கு உத்தரவால் நாடெங்கிலும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்யும் புலம்பெயரும் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் அவர்களுடைய சொந்த ஊருக்கே சென்று விடலாம் என்று பலரும் லாரியில் அல்லது நடந்தே கூட சென்று விடுகின்றனர். அந்த வகையில் தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியையும் மகளையும் தள்ளுவண்டி ஒன்று செய்து அதில் வைத்து இழுத்துக் கொண்டே தன்னுடைய கிராமத்திற்கு அழைத்துச் சென்ற வீடியோ பதிவுகள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
ஐதராபாத்தில் வேலை பார்த்து வந்தவர் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளி. இவரது பெயர் ராமு. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் ஐதராபாத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கர்ப்பிணி மனைவியும் பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி பெயர் தன்வந்தா. ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து உண்ண உணவு கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்த அவர் ஐதராபாத்தில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு நடந்தே செல்லலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார். தன் மகளை தோளில் சுமந்து கொண்டு கர்ப்பிணி மனைவியோடு கால் கிடக்க பல கிலோமீட்டர் தூரம் உணவு கூட கிடைக்காமல் நடந்தே சென்று உள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய பெண் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு நடக்க முடியாது என்பதை உணர்ந்த ராமு செய்வதறியாது திகைத்து நின்று இருக்கிறார். அப்பொழுது அவர்கள் காட்டுவழிப் பாதையில் வந்த நேரத்தில் அவருக்கு யோசனை ஒன்று கிடைத்துள்ளது. அந்த காட்டில் கிடைத்த மரக்குச்சிகளையும் பலகைகளையும் வைத்து கைகளால் இழுத்துச் செல்லக்கூடிய தள்ளுவண்டி ஒன்றை தயார் செய்து இருக்கிறார். பின்னர் அதில் அவரது கர்ப்பிணி மனைவியையும் அந்த சின்ன பெண் குழந்தையையும் வைத்து இழுத்து செல்ல முடிவு செய்திருக்கிறார்.
இப்படியே கை வண்டி மூலம் இழுத்துக்கொண்டே சுமார் 700 கிலோ மீட்டரை ராமுவும் அவரது குடும்பத்தினரும் கடந்து உள்ளனர். ஒருவழியாக நேற்று இரவு அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு அருகில் சென்று உள்ளனர். மகாராஷ்டிராவின் எல்லையை அடைந்த பொழுது அங்கிருந்த போலீசார் இவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணை மேற்கொண்ட பொழுது ராமு தனக்கு நேர்ந்த சம்பவங்களைப் பற்றி கூறியிருக்கிறார். போலீசார் அவர்களுக்கு உண்ண உணவும் அவரது குழந்தைக்கு காலணிகளையும் அளித்துள்ளனர். அவர்கள் பத்திரமாக சொந்த கிராமத்திற்கு வண்டியும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
ராமுவும் அவரது குடும்பத்தினரும் தள்ளுவண்டி மூலம் 700 கிலோமீட்டர் பயணித்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.