வங்கிகள் இணைப்பு விபரீத விளைவு உண்டாகும்! கி. வீரமணி செம ஷார்ப் அறிக்கை!

இன்று நாடெங்கும் பரபரப்பு பேச்சு என்றால் பொருளாதார மந்தமும், அதனை சரிக்கட்டுவதற்காக நிர்மலா சீதாராமன் கையில் எடுத்திருக்கும் வங்கிகள் இணைப்பு விவகாரம்தான்.


இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி எப்படியெல்லாம் கொந்தளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று பாருங்கள். கடந்த காலங்களில் வங்கிகளின் இணைப்பால் - குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் முன்னேற்றம் எதுவும் நடைபெறவில்லை என்பதே உண்மை நிலை.

தொடக்க காலங்களில் தனியார் வங்கிகள் திவால் ஆன நிலையில் அவைகள் அரசு வங்கிகளுடன் இணைக்கப்பட்டு முழுமையான வங்கிச் சேவை தொடர்ந்தது, வங்கிகளில் உள்ளோரின் பணியும் பாதுகாக்கப்பட்டது. அதனை ஒரு வகையில் சரி எனலாம். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்கான தேவையும் இல்லை;

அதனால் உருப்படியான நன்மை எதுவும் கிடைக்கவில்லை. மாறாக ஒரே ஊரில் இணைக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் பல இருந்தால் அவைகளை சேர்த்து ஒரே வங்கிக் கிளையாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் பொது மக்களுக்கு வங்கிச் சேவையினை பரவலாக வழங்கிடுவதை முடக்கிப் போடும் பணிதான் வேகமாக நடைபெற்றுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டிருப்பது ஏற்கெனவே வங்கிக் கிளைச் சேவைப்பகுதியில் உள்ள பொதுமக்கள்தான். அந்தக் கிளைகளில் கணக்கு வைத்துள்ள, கடன் பெற்றுள்ள நிறுவன முதலாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரே ஊரில் எந்தப் பகுதியில் இணைக்கப்பட்ட வங்கிக்கிளை இருந்தாலும் தங்களுக்கு வேண்டிய வங்கிச் சேவைகளை, நிதி உதவியினை அவர்களால் பெற்று விட முடியும். ‘பாரத ஸ்டேட் வங்கி’யுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டதால் ஏறக்குறைய 1000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டன என்பதுதான் கை மேல் கிடைத்த பலன்!

வங்கிகளின் இணைப்பால் நடுத்தர, அடித்தள மக்கள் பாதிக்கப்படுவதை சற்றும் கருத்தில் கொள்ளாமல், 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 பெரிய வங்கிகளாக்கும் ஒரு சீர்திருத்த(?) நடவடிக்கையினை பா.ஜ.க. அரசு எடுத்தது கண்டனத்துக்குரியது. உலகத்தரத்திற்கு இந்நாட்டு வங்கிகளை உயர்த்துவதாகச் சொல்லப்படும் இந்த உள்நாட்டு மக்களுக்கு பயன்படாத வங்கிச் சீர்திருத்த நடவடிக்கை தேவையில்லாதது.

‘பெரிய அளவிலான வங்கிகள்தான் சிறப்பாகச் செயல்படும்; சிறிய வங்கிகள் முழுமையான சேவையினை வழங்க முடியாது’ எனும் மேலைநாட்டு (வல்லரசு நாடுகள்) கருதுகோள் நம் நாட்டுக்குப் பொருந்தாது. நமது நாட்டில் உள்ளது போல விரிவான - பெரும் பகுதிகளை உள்ளடக்கிய வங்கிச் சேவை வழங்கப்பட்டு வரும் நிலை எந்த நாட்டிலும் கிடையாது. 

50 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால் ஏற்பட்ட நல்ல விளைவு அது. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டில் குறைகள் இருக்கலாம். குறைகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கையில் காயம் ஏற்பட்டால் மருந்து போட்டு சிகிச்சை அளித்திட வேண்டும்.

கை இருப்பதால்தானே காயம் ஏற்படுகிறது என கையை வெட்ட நினைக்கும் சிகிச்சை முறை சரியானதாகாது. வங்கிகளின் செயல்பாட்டை சீர்செய்திட- சிகிச்சை அளித்திட வங்கிகள் இணைப்பு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. தவறான சிகிச்சை அளித்து நோயாளியை கொன்று விடக்கூடாது.

அளிக்கப்படும் சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தப்பட வேண்டும்; ‘‘நோயை விட சிகிச்சை முறை ஆபத்தானது’’ என்பதைப் போன்று உள்ளது, பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்.

நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் இப்பொழுது பொதுத்துறை வங்கிகளாக - தனியார் மூலதனப் பங்குகளாக மாற்றப்படும் போக்கு தவறானது. முழுமையான தனியார் மயத்தை நோக்கி வங்கிகளைக் கொண்டு செல்லும் வழிமுறையே அது. அதனையும் தாண்டி இன்று வங்கிகள் இணைப்பினை நடத்துவது நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவான செயலே ஆகும்.

நிதி மூலதனத் தேவை கட்டாயத்தால் பொதுத்துறை வங்கியினை தனியார் மூலதன பெரும்பான்மை வங்கியாக்கிடும் நிலைமை உள்ளது. அடுத்தகட்டமாக, வெளிநாட்டு மூலதனத்தை மட்டுமே நம்பி வங்கிகள் செயல்படும் காலம் நிச்சயம் ஏற்பட்டு விடும் அத்தகைய (அழிவுப்)பாதைக்கு இட்டுச் செல்வதன் ஒரு கட்டமே மேற்கொள்ளப்படவிருக்கும் 10 பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு முயற்சியாகும்.

நிறுவன முதலாளிகளுக்கு, ஆதரவாக பொதுத்துறை வங்கிகளை தாரை வார்த்திடும் செயலே வங்கிகளின் இணைப்பு நடவடிக்கை, அதற்கான விதை போடப்பட்டு விட்டது. நச்சு விதை முளைக்கும் நிலையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். விருட்சமாக வளர்ந்து விட்டால் வெட்ட முடியாது.

வங்கிகளின் இணைப்பினால் வங்கி ஊழியர்களின் பணிப் பாதுகாப்பிற்கு எந்த பங்கமும் ஏற்படாது என்பதான நிதி அமைச்சரின் வார்த்தைகளில் நம்பிக்கை கிடையாது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகளே சாட்சியங்களாகும். 

விபரீத விளைவுகளை உருவாக்கவல்ல வங்கிகளின் இணைப்பு நடவடிக்கை வேண்டாம். மத்திய பா.ஜ.க. அரசு நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை காட்டுவதாக இருந்தால் இந்த வங்கி இணைப்பு முயற்சியினை கைவிட வேண்டும்; அதனால் தேவையற்ற விளைவுகளை அறுவடை செய்திடும் சூழல் நிச்சயம் உருவாகும்.

தனியார் வங்கிகள் அரசுடைமையாகி, பின்னர் பொதுத்துறை வங்கிகளானாலும் அந்தந்தப் பகுதி மக்களுக்கான வங்கியாகத்தான் அவைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பொதுத்துறை வங்கிக்கும் அந்தந்தப் பகுதியில், மாநிலப் பகுதியில் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவையாற்றும் ஒருவித கலாச்சாரத்தன்மை உண்டு; வங்கிப் பாரம்பரியமும் உண்டு;

அதன் பலன் பொதுமக்களுக்கானதே. அதனை உடைத்தெறிந்து இணைப்பு நடவடிக்கையினை மேற்கொள்வது கூடாது. இப்பொழுது 10 பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் மூலம் 4 பெரிய வங்கிகள் உருவாகும் என்கிறார்கள். மூன்று பெரிய வங்கி உருவாக்கத்தில் ஒருவித தொடர்பு - சேவை வழங்கிடும் பகுதிகளுக்கிடையே தொடர்பு உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியினைக் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள வடநாட்டு வங்கியுடன் இணைப்பதான அறிவிப்பு தமிழ்நாட்டு வங்கியின் சேவைப் பயன்பாட்டை பாதித்திடும் முயற்சியாகவே இந்த இணைப்பு கருதப்பட வேண்டி உள்ளது. மத்திய அரசு, வங்கிகள் இணைப்பை திரும்பப் பெறும் முடிவை எடுப்பதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கமுடியும் என்று கூறியிருக்கிறார்.