சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் அப்பா மகன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் அப்பா மகன் மீது போலீசாரால் போடப்பட்ட எஃப் ஐ ஆர் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகளின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.
அப்பாவும் மகனும் தரையில் புரண்டதால் ஏற்பட்ட காயம்..! போலீஸ் அடிக்கவில்லை! பகீர் கிளப்பிய சாத்தான்குளம் FIR..!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் என்ற பகுதியில் ஜெயராஜ் என்பவர் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கடை அடைப்பது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயராஜ் போலீசாரால் தாக்கப்பட்டார். தந்தை தாக்கப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்ட மகன் பென்னிக்ஸும் போலீசாரால் தாக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் தந்தை மற்றும் மகன் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகன் பென்னிக்ஸ் கடந்த 22ஆம் தேதி இரவு நெஞ்சு வலியாலும், அவரது தந்தை ஜெயராஜ் கடந்த 23ம் தேதி காலை காய்ச்சலாலும் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் ஆகியோரை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஐ ரகு கணேஷ் ஆகியோர் தாக்கியதால் தான் உயிரிழந்தனர் என்று வியாபாரிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த வியாபாரிகள் என்பதால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இணைந்து வியாபாரிகள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.இதன் காரணமாக இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் எஸ் ஐ ரகு கணேஷ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்கள். எனினும் இதற்கு எதிராக வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கொந்தளித்ததால் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வேறிடத்திற்கு கூண்டோடு மாற்ற பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் போலீசார் தரப்பில் எழுதப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் கடையை நாங்கள் அடைக்க சொன்னோம். அதற்கு எங்களையே அவதூறாக பேசி அப்பாவும் மகனும் தரையில் புரண்டார்கள். அதனால் ஏற்பட்ட ஊமைக்காயம் தான் அவர்கள் உடலில் உள்ளது என உடலில் ஏற்பட்ட காயத்திற்கு காரணம் சொல்லி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதால் வியாபாரிகள் இதை கண்டு மிகவும் கொந்தளிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.