பூட்டிய அறைக்குள் சடலமாக கிடந்த இளம் பெண் மருத்துவர்..! தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென இதயத்துடிப்பு நின்றது..!

சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதியில் மர்மமான முறையில் சடலமாக இருந்த மாணவி பிரதீபா இதய ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் பிரதீபா. இவர் பயிற்சி மருத்துவராக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரசவ வார்டில் பணியாற்றி வந்தார். ஊரடங்கு காரணமாக மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவி பிரதீபா கடந்த மே மாதம் 1ம் தேதி பூட்டிய அறைக்குள் சடலமாக கிடந்தார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகி இருந்தது. சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவிலும் மாணவிக்கு கொரோனா நோய்தொற்று இல்லை என தெரியவந்தது.

பிரதிபாவின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என போலீசாரும் அவரது பெற்றோரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு மாணவி பிரதிபாவின் பிரேத பரிசோதனை இறுதி அறிக்கையை தடயவியல் துறை மருத்துவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த அறிக்கையில் மாணவி பிரதீபா இதய ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அதாவது மாணவி பிரதீபா தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென இதயத்துடிப்பு நின்றுள்ளது. இதுவே அவரது மரணத்திற்கு காரணமாகியுள்ளது. இதன் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதியில்  மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி பிரதிபாவின் மரணத்தில் இருந்த மர்மம் வெளிவந்துள்ளது.