ஆதி மூலமே காப்பாற்று..! கஜேந்திர மோட்சத்தின் கதை இது.

இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான்.


ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார்.

இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியிருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,""மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார்.

முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாவி விமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, ""நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன்,""ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ''என்றார்.

ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,""நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியர்,""கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்,''என்றார்.

இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக வரலாறு. இந்த நிகழ்வு ஸ்ரீரங்கம் காவிரிக் கரையில் நடந்தது. அதை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் கஜேந்திர மோட் சம் நடை பெறும்

கஜேந்திர மோட்சத்தின் தத்துவம் என்ன? தன்னைச் சரணென்று அடைந்தவர்களை எந்தச் சூழலிலும் பகவான் காப்பாற்றுவான் என்பது ஒன்று. ‘சரணடைந்தவர்களின் யோக க்ஷேமத்தைக் காப்பேன்’ என்று பின்னால் கிருஷ்ணாவதாரத்தில் இதைத்தான் சொல்கிறான் பகவான். ஆக, முதலில் செய்துகாட்டி விட்டு பிறகு உபதேசிக்கிறான். இது இரண்டாவது.

ஜலத்திலே இருக்கிற பரமாத்மா பிரணவ ஸ்வரூபியானவன். ஓம்காரமாக இருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கே நான் உரியவன் என்று (நம:) நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். 'நம' வென்னலாம் கடமை' - திருவேங்கடத்திலே இருக்கிறானே அவனெதிரில் போய் 'நம' என்று சொல் என்கிறார் ஆழ்வார்! நம: என்று நாம் சொல்லும் போது 'நான் எனக்கே உரியவன்' என்கிற நிலையை அது அகற்றுகிறது. நாமே நமக்கு ரக்ஷகர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமல்லவா..? நமக்கு நம்மை ரக்ஷித்துக் கொள்ளும் சக்தியுள்ளதாக நினைத்துக் கொள்கிறோமே - இந்த அறிவைப் போக்குகிறது நம:

நம்முடைய மனம்தான் அந்த ஏரி. அதிலே நற்குணமான யானையும் இருக்கிறது. தீய குணங்களான முதலைகளும் இருக்கின்றன. அவைதான் எப்போதும், நம்மை தவறை நோக்கிச் செலுத்தி ஆபத்தில் சிக்க வைக்கின்றன. அவற்றில் இருந்து காப்பாற்றப்பட, பகவானை நோக்கி எப்போதும் நம் எண்ணம் இருக்க வேண்டும்.

இந்த கஜேந்திர மோட்ச வைபவத்தை கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள் பிருந்தாவனத்தில் உள்ள ரங்காஜி திருக்கோயிலில். அநேகமாக பல ஆலயங்களில் மறந்தே போய்விட்ட இந்த வைபவம், இங்கு மிகச் சிறப்பாக நடக்கிறது. குறிப்பாக, வைகுண்ட ஏகாதசியன்று காலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது என்றால், அன்று இரவு இந்த கஜேந்திர மோட்சம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மிகப்பெரிய வடிவில் யானை மற்றும் முதலை உருவங்கள் செய்து வைத்து இந்த வைபவத்தைக் கொண்டாடுகிறார்கள்.