திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை தர பெண் மருத்துவர் ஒருவர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
திருமணத்தை தள்ளி வைத்துக் கொள்ளலாம்..! ஆனால் கொரோனா நோயாளிகள் பாவம்..! இளம் பெண் மருத்துவரின் நெகிழ வைக்கும் செயல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதையொட்டி, கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்நிலையில், கேரளாவின் கண்ணூர் பகுதியில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரியும் ஷிபா என்பவருக்கும், துபாயை சேர்ந்த தொழிலபதிபருக்கும் மார்ச் 29ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மணப்பெண் ஷிபா, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தன்னை மறந்து ஈடுபட்டு வருகிறார். இதனால், தற்போது தனக்கு திருமணம் வேண்டாம், மற்றொரு தேதியில் திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஷிபா மறுத்துவிட்டாராம். ஷிபாவிற்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், சில நாட்கள் விடுமுறை தர சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் முன்வந்திருக்கிறது. ஆனாலும், ஷிபா மறுத்துவிட்டாராம்.
பொதுமக்கள் உயிருக்குப் போராடி வரும் இந்த நெருக்கடியான சூழலில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே ஒரு மருத்துவரின் பணி, என்று ஷிபா திட்டவட்டமாகக் கூறிவருகிறாராம். எனினும், ஷிபாவின் முடிவை ஏற்றுக் கொண்ட மாப்பிள்ளை வீட்டார், கொரோனா வைரஸ் பிரச்னை முடிந்த பிறகு, திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனராம். திருமணத்தைக் கூட தள்ளி வைத்துவிட்டு, பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள ஷிபா போன்ற மருத்துவர்கள்தான் நமக்கு கண் கண்ட தெய்வமாக உள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.