படுத்து தூங்குறவங்கள பார்த்தா தலையில் கல்லை தூக்கி போட்டுடுவேன்! திருச்சியை மிரட்டும் சைக்கோ!

காவலாளியின் தலையில் கல்லை தூக்கி போட்டு திருடன் கொலை செய்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதி அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள ஒத்தக்கடை என்னும் பகுதியில் டேப்ஸ் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இந்த வளாகத்தில் பாதுகாப்பு காவலாளிகள் சுழற்சி முறையில் வேலை பார்த்து வந்தனர். அவ்வகையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் என்கிற காவலாளி பணியில் ஈடுபட்டிருந்தார்.

முதல் தளத்தில் அவர் லிப்ஃட்டுக்கு அருகே படுத்துக்கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வளாகத்திற்குள் பாராங்கல்லுடன் நுழைந்துள்ளார். தன் கையிலிருந்த பாராங்கல்லை 4 முறை காவலாளியின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இந்த காட்சிகள் தெளிவாக சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தன. 

மறுநாள் காலையில் காவலாளி சடலமாக இறந்து கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் செந்தில்குமாரை கொலை செய்வது தெளிவாக தெரிந்தது. செந்தில்குமாரின் சட்டைப்பையில் இருந்த பணத்தையும், செல்போன்களையும் அந்த மர்ம நபர் தூக்கி சென்றுள்ளார்.

உடனடியாக அவர்கள் செந்தில்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். செந்தில் குமாரை கொலை செய்வதற்காக அந்த மர்ம நபர் வந்தாரா அல்லது திருடுவதற்கு தடையாக இருப்பதால் செந்தில்குமாரை கொலை செய்தாரா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.