தந்தைக்கு மது விருந்து..! பெற்ற தாய் முன்னிலையில் கடத்தப்பட்ட குழந்தை..! கரூரில் அரங்கேறிய திக் திக் சம்பவம்!

தாயின் அருகிலேயேயிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் 48 மணி நேரத்திற்குள் குழந்தை மீட்கப்பட்டுள்ளது அனைவருக்கும் நிம்மதியைத் தந்துள்ளது.


கரூர் மாவட்டத்தில் பாலத்துறை என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ஓ.கே. நகர் என்னும் இடத்தில் கார்த்திக் - விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிதுன் என்ற குழந்தையுள்ளது. 5-ஆம் தேதியன்று விஜயலட்சுமி மற்றும் கார்த்திக் துணி துவைப்பதற்காக தவிட்டுப்பாளையம் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர் கார்த்திக்கிடம் பேச்சு கொடுத்துள்ளார். மேலும் மதுபான கடை எங்கே இருக்கிறது என்றும் கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். பிறகு இருவரும் மதுபான கடைக்கு சென்று நன்றாக மது அருந்தியுள்ளனர். இதனிடையே அதிகளவில் மது அருந்தியகருந்த கார்த்திக்கை கரூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே அந்த மர்மநபர் இறக்கிவிட்டு மீண்டும் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்த கரைக்கு வந்துள்ளார்.

குழந்தையுடன் விளையாடுவது போன்று நடித்து, குழந்தைகளை அந்த மர்மநபர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. நெடுநேரமாகியும் குழந்தையை தேடியும் பெற்றோரால் கண்டுபிடிக்க இயலவில்லை. உடனடியாக அப்பகுதி வேலாயுதம்பாளையம் காவல்துறையினரிடம் குழந்தையின் பெற்றோர் புகாரளித்தனர்.

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தேகிக்கும் படி குழந்தையை தூக்கி இந்த மர்ம நபர் சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் அவர்கள் சந்தேகித்தனர். உடனடியாக விராலிமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டெடுத்தனர். மேலும் குழந்தையை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.