36வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த காதல் ஜோடி! 88 வயதில் 90 வயது காதலரை பார்த்து கலங்கிய சுபத்ரா! முதியோர் இல்லத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

36 வருடங்களுக்கு பிறகு கணவன்-மனைவி ஒன்றிணைந்திருக்கும் சம்பவமானது கேரள மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கலூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் "வெளிச்சம்" என்ற முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் சில வாரங்களுக்கு முன்னர் சுபத்ரா என்ற 88 வயது மூதாட்டி சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் 90 வயதான சாய்டு என்ற முதியவர் கேட்பாரற்று இந்த முதியோர் இல்லத்தில் இணைந்தார்.

அவருடைய உதவியாளரான அப்துல்கரீம் என்பவர் அவரிடம் பல கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார். அப்போது சுபத்ரா சாய்டுவை கண்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தார். சாய்டுவும் அதிர்ச்சி அடைந்ததை கண்ட அப்துல்கரீம் இருவருக்கும் இருவரையும் தெரியுமா என்று கேட்டுள்ளார்.

உடனே, சுபத்ரா அவர்தான் என் கணவர் என்று கூறினார். சுபத்ரா தன்னுடைய இளம் வயதிலேயே திருமணமானவர். அவருடைய முதல் கணவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தார்கள். ஆனால் அவருடைய கணவன் சில மாதங்களிலேயே இறந்து போனார்.

அதன் பின்னர் சுபத்ரா தன்னுடைய தந்தையுடன் வாழ்ந்து வந்தார். சாய்டு சுபத்ராவின் தந்தையின் நண்பராவார். சில மாதங்கள் பழகியவுடன், சுபத்ரா சாய்டுவை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். சுபத்ராவின் தந்தையின் விருப்பப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் 29 ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன் பின்னர் சாய்டு வேலை தேடி வட இந்தியாவிற்கு சென்றார். அப்போது இருவரும் பிரிந்தனர். 

இருவரின் வாழ்க்கையும் தடம்மாறிப் போனது. நாளடைவில் சுபத்ராவின் குழந்தைகள் உயிரிழந்தனர். பின்னர் அவர் இறைச்சி பொருளை விற்று வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் கோவில்களில் படுத்து உறங்கி வந்தார். அவருடைய உடல்நிலை மோசமானதால் இந்த முதியோர் இல்லத்திற்கு வந்துள்ளார்.

சாய்டு சுபத்ராவை தேடி கொடுங்கலூர் முழுவதும் தேடி அலைந்துள்ளார். அதன் பின்னர் சில கடைகளின் படிக்கட்டுகளில் படுத்து கொண்டிருந்த போது பொதுமக்கள் அவரை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். தற்போது இருவரும் மகிழ்ச்சியாக அந்த முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது அந்த முதியோர் இல்லத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.