மெக்டொனால்ட்ஸ் உணவக பர்க்கரில் விஷப் பூச்சி! சாப்பிட்டவருக்கு நேர்ந்த விபரீதம்! பிறகு நடந்த தரமான சம்பவம்!

ஐந்து வருடங்களுக்கு முன்பு மெக்டொனால்ட்ஸ் கடையில் இறந்துபோன பூச்சியிருந்த பர்கரை சாப்பிட்டவருக்கு 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சந்தீப் சக்சேனா என்பவர் கிழக்கு டெல்லியில் வசித்து வருபவர். இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு நொய்டா நகரில் உள்ள ஒரு மெக்டொனால்ட்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் "மெக் ஆலு டிக்கி" என்ற பர்கர் வகையை உண்டார். சாப்பிடும் போது திடீரென்று பூச்சி ஒன்று பர்கரில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மீதி பர்கரை வைத்துவிட்டு அந்த கடையின் மேலாளரிடம் தெரிவித்தார். சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சக்சேனாவின் உடல்நிலையில் சிறிது நேரத்திற்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. உடனே அவர் உணவு தரம் பார்க்கும் அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்தார்.

அங்கிருந்து வந்த மாஜிஸ்ட்ரேட் ஒருவர் அந்த மெக்டொனால்ட்ஸ் கடையில் இருந்த உணவை ஆய்விற்கு எடுத்துச் சென்றார். இதற்கிடையே சக்சேனா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் அவருடைய உடலை பரிசோதித்த போது, அபாயகரமான சாம்பிள்கள் அவருடைய ரத்தத்தில் தெரிந்துள்ளது. விஷத்தன்மையுள்ள பூச்சியை அவர் உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்தது. 

உடனே அவர் டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஐந்து வருடங்களாக இந்த வழக்கினை உணவு தரம் பார்க்கும் அமைப்பினர் காலதாமதம் செய்து வந்தனர். இறுதியாக ஐந்து வருடங்கள் கழித்து அவர்கள் தங்களுடைய அறிக்கையினை சில நாட்களுக்கு முன்பு நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அறிக்கையின் படி இன்று  நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது மெக்டொனால்ட்ஸ் உணவு நிறுவனம் சக்சேனாவிற்கு 895 ரூபாய் மருத்துவ செலவிற்காகவும், 50,000 ரூபாய் மன உளைச்சலுக்காகவும், 20000 ரூபாய் சட்ட செலவுகளுக்காகவும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு வழக்கினை நிறைவு செய்தது.