செல்வத்தை வாரி வழங்கும் சக்தி பீடமாக திகழ்கிறது திருப்பூர் ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோயில்.
செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமி திருக்கோயில்..! திருப்பூருக்குப் போய் தரிசனம் செய்தால் திருப்பம் நிச்சயம்

கருவறையில் ஸ்ரீ விஷ்ணுப்பிரியாவாக அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் மகா லட்சுமியின் திருவுருவம் பார்ப்பவர் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கல்வி செல்வம் வீரம் மூன்றையும் ஒன்றாகப் பெற திருப்பூர் ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. முப்பெரும் தேவியர் ரூபத்தில் தாயார் இங்கு அருள் பாலிப்பது சிறப்பு அம்சமாகும்.
அஷ்டலட்சுமிகளின் வடிவங்களாக ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களும் ஒன்றாகக் காட்சி அளிக்கும் விதமாக ஸ்ரீ மகாலட்சுமியே வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். இந்த தலத்தைப் பொறுத்தவரை பூர்வ ஜன்ம கர்ம வினைகளை தீர்த்து மோட்சம் வழங்கும் தலமாக பக்தர்களால் கருதப்படுகிறது. குழந்தைபாக்கியம், உடற்பிணி நீங்குதல், கடன் தொல்லை ஆகியவற்றைத் தீர்த்தும் பில்லி சூனியம் போன்றவற்றை நீக்கி அருள் தரும் பீடமாகவும் இந்த ஆலயத்தை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஆடி அமாவாசை மற்றும் குரு பூஜையின் போது பக்தர்கள் பக்தியுடன் பால்குடம் தீர்த்த குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவது என வருடம் தோறும் பக்தர்கள் தங்கள் பிரச்சனைகள் தீர வழிபடுவது இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.
இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் எழுப்பியவர் குருமகாசன்னிதானம் கல்கி ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள். ஸ்ரீ மகாலட்சுமிக்கு ஆலயம் எழுப்பப்பட்டதற்கான காரணம் குறித்து ஸ்ரீ குரு மகா சன்னிதானம் கூறுகையில் தற்போது திருப்பூர் என அழைக்கப்படும் இந்த ஊர் ஆதிகாலத்தில் ஸ்ரீபுரம் என அழைக்கப்பட்டு வந்தது. ஸ்ரீபுரம் என்றால் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்யும் ஊர் எனப் பொருளாகும். அந்த வகையில் சிறப்பு பெற்ற இந்த ஸ்ரீபுரத்தில் ஆதிகாலம் முதலே திருமாலோடும், ஆதிசேஷனோடும் இருப்பிடம் கொண்டிக்கிறாள் அன்னை ஸ்ரீமஹாலட்சுமி.
மேலும் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது மதுரை திண்டுக்கல் வழியாக வந்தபோது தாரகாபுரி அரசனின் பசுக்களை பட்டியிலிருந்து துரியோதனன் கவர்ந்து சென்றுவிட்டான். இதை எதிர்த்து போரிட முடியாமல் பஞ்சபாண்டவர்களிடம் அரசன் முறையிட அரசனுக்கு உதவிடும் வகையில் பஞ்சபாண்டவர்கள் துரியோதனனிடமிருந்து பசுக்களை மீட்ட இடம், பெரும் தொழுவம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் பசுக்களை மீட்டு பாண்டவர்கள் திரும்பிச் சென்றதால் அந்த இடம் திருப்பேர் என்றும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் திருப்பூர் என அழைக்கப்பட்டு வருகிறது என்றார் சுவாமிகள்.
இக்கோயிலின் சுவாமிகள் அவதரித்த குருபூஜை விழா, கல்கி ஜெயந்தி விழா, சித்ரா பவுர்ணமி விழா, மாதந்தோறும் பௌர்ணமி பூஜை, குத்துவிளக்கு பூஜை என சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்வாக்கு, அன்னதானமும் நடைபெற்றுவருகின்றன. பூஜையின்போது கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், காளியம்மன் ஹோமம், சூலினி துர்கா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் அபிஷேக அலங்காரமும் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து அருள்வாக்கு பெற்று செல்கின்றனர். சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.