கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ் பெற்ற திருக்கோயில்களில் ஒன்று, பழவங்காடி ஸ்ரீ மகா கணபதி ஆலயம்.
ராணுவக் காவலில் இருக்கும் கள்ளியங்காட்டு நீலி ஆலயம் தெரியுமா? தடைகளை உடைத்துத்தள்ளும் திருத்தலம் இது.

திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டை சிட்டி பேருந்து நிலையம் அருகில் பிரதான வீதியின் ஓரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சிதறு தேங்காய் உடைப்பது இங்கு பிரதான பிரார்த்தனை ஆகும். ஆலயத்தினுள்ளே 32 வித்தியாசமான தோற்றத்தில் கணபதி ஓவியங்கள் இருக்கின்றன. கோயிலின் உள்ளே ஐயப்பன், துர்க்கை, நாகராஜன் மற்றும் பிரம்ம ராட்சஷன் ஆகியவர்களும் உறைந்து அருள் பாலிக்கிறார்கள். இங்கு மூலவரான மகாகணபதி அபூர்வ கோலமாக வலது காலை மடித்து அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இவரை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் கிடைத்த மகிழ்ச்சி அளவற்றது ஆகும். இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இதை நிர்வகிப்பது இந்திய ராணுவம் என்பதுதான்.
திருவனந்தபுரத்தில் தற்போதுள்ள பழவங்காடி அருள்மிகு மகா கணபதி ஆலயம் திருவாங்கூர் தலைநகராக இருந்த பத்மநாபபுரத்தில் சரித்திரத்தோடு இணைந்த ஒன்று. மகாராஜா வசித்த கோட்டையின் நான்கு திசைகளிலும் ராணுவப் படைகள் காவல் காப்பது வழக்கம். ஒரு திசையில் மட்டும் கள்ளியங்காட்டு நீலி என்னும் யக்க்ஷி தேவதை குடிகொண்டிருந்ததால் அந்தத் திசையில் இரவுக் காவலுக்கு போகிறவர்கள் மறுநாள் மயக்க நிலையில் தரையில் விழுந்து கிடப்பார்கள். ஒருநாள் அங்கு காவலுக்கு போன வீரர் ஒருவர் பக்கத்திலிருந்து வள்ளியூர் ஆற்றில் குளித்த பிறகு பணிக்கு செல்லலாம் என்று ஆற்றில் இறங்கினார். ஆற்றுநீரில் அவருடைய காலில் பட்டது மகாகணபதியின் அழகான ஒரு சிலை. அதைக் கையோடு எடுத்துச் சென்று யக்க்ஷி திசையில் தன் பணியிடத்தில் வைத்தார். மறுநாள் விடிந்ததும் வந்து பார்த்த மற்ற வீரர்கள் அவருக்கு ஏதும் நிகழாதது கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவர் மகாகணபதியின் சிலையை காட்டி விநாயகர்தான் தன்னைக் காப்பாற்றியதாக சொன்னார்.
அது தொடங்கி கணபதி சிலையை ராணுவ வளாகத்திலேயே வைத்து வீரர்கள் பூஜை செய்து வழிபட ஆரம்பித்தனர். யக்க்ஷி உள்ள திசைக்குக் காவல் பணிக்குச் செல்வோருக்கு அதன்பின் எந்த இடையூறும் ஏற்படவில்லை.
திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்த பத்மநாபபுரத்தை திருவனந்தபுரத்திற்கு மாற்றினார்கள். ராணுவத்தின் பெரும் பகுதியும் இடம் மாறியது. கூடவே படைவீரர்கள் காவல் தெய்வமான மகா கணபதி சிலையை எடுத்து வந்து பழைய ஸ்ரீகண்டேஸ்வரர் ஆலயத்தில் ஒரு அரசமரத்தின் கீழ் வைத்து தற்காலிகமாக வழிபட்டு வந்தார்கள். இதன் பிறகு தர்மராஜா என்று மக்களால் போற்றப்பட்ட மகாராஜா ராமவர்மா உதவியால் திருவனந்தபுரம் கோட்டை பகுதியில் ஒரு சிறு ஆலயம் கட்டி மகாகணபதியின் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள்.
பஞ்ச வாத்தியம் முழங்க
தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த கணபதிக்கு தேங்காய் தான் முக்கிய நிவேதனப்
பொருள். தடைகளை வெற்றி கொள்ள இங்கு பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுகிறார்கள்.