இரட்டைக் குடியுரிமையில் இரட்டை வேடம் போடுகிறாரா மாஃபா பாண்டியராஜன்..? தி.மு.க. கடும் எதிர்ப்பு.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு உறுதியாகக் கூறியிருக்கும் நிலையில், அதெல்லாம் ரொம்ப ஈசி என்று பேசி மாட்டியிருக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.


சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென குறுக்கிட்டார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். “அமெரிக்கா, இங்கிலாந்து, ஜொர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இரட்டை குடியுரிமைக்காக இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. அதைப்போல இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டியதுதான். அதனால், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியமான ஒன்றுதான்’’ என்று தெரிவித்தார்.

உடனே இந்த விவகாரத்துக்கு கொந்தளித்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, இன்று உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டுவந்தார். “இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் பேசியுள்ளார். ஆனால், இரட்டை குடியுரிமை சாத்தியம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது இலங்கைத் தமிழர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால், அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

உடனடியாக இது குறித்துப் பேசிய மாஃபா பாண்டியராஜன், “இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இதைத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தார். தமிழக அரசின் நிலைப்பாட்டை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் பாராட்டியுள்ளார்’’ என்று மீண்டும் அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்தார்.

அதனால் வழக்கம்போல் உரிமை மீறல் பிரச்சினையை எடுத்துக்கொள்ள சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். உடனே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன் தலைமையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்குத்தானே சட்டமன்றத்துக்கே வந்தனர் என்று சிரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.