சித்தர்கள் ஆன்மா உலவும் கோவில் தான் சிறப்படையும் என்று பெரியோர் சொல்ல கேட்டிருக்கிறோம்
பெண்களின் மாதவிடாய் பிரச்சனை மற்றும் உடல் ரீதியான அனைத்து பிரச்சனைகளும் தீர இக்கோயிலிலுள்ள சித்தர் தூணில் சீட்டு எழுதி கட்டி வேண்டுதல் செய்யுங்க!!!

பழனி முருகன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவரங்கம் ரங்கநாதர் கோவில், மருதமலை முருகன் கோவில் இப்படி தொடர்ந்து சித்தர்கள் வாழும் கோவில்கள் தான் பேரும் புகழும் பெற்று உச்ச பெருமைகளோடு உலா வருகிறது. அந்த வகையில் நம் நாட்டின் திருக்கோயில்கள் தவ வலிமை வாய்ந்த ஒப்பற்ற மாபெரும் சான்றோர்களால் நிறுவப்பெற்று இம்மையில் அறம் பொருள் இன்பத்தையும் மறுமையில் வீடு பேற்றையும் அருளும் பெருமைக்குரியதாக இருந்து வருகிறது.
இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபடும் அன்பர்களது குறைகளைக் களைவதுடன் அவர்களது பிறவிப் பிணியையும் போக்கும் இறையின் வல்லமை நமது அறிவுக்கு அப்பாற்பட்டது. இப்படி அடியார்தம் உயிர்காக்கும் மருத்துவனாய் அவர்களது வாழ்வை வளமாக்கும் வள்ளலாய் இறைவன் அருளும் தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை ஸ்ரீ பாலாம்பிகை – மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.
கருப்பைக்கு வரும் இயற்கைப் பிரச்னைகளும் கோளாறுகளும் வியாதிகளும் எத்தனை எத்தனை அவற்றை எல்லாம் தீர்த்துவைக்கும் தமிழகத்திலேயே ஒரே கோவில் உண்டு என்று சொன்னால் அது திருச்சிக்கு அருகே இருக்கும் பெட்டவாய்த்தலை ஸ்ரீ பாலாம்பிகை – மத்யார்ஜுனேஸ்வரர் கோவில்.
தமிழகத்தின் பாடல் பெற்ற சிவத்தலங்களில் பெரும்பாலும் அய்யனே பிணி தீர்க்கும் பெரு மருத்துவராக விளங்க சிற்சில கோயில்களில் அந்தப் பணியை ஏற்று பிணியைத் தீர்க்கிறாள் அம்பிகை. பெட்டவாய்த்தலை ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வர சுவாமி கோயிலிலும் அன்னை பாலாம்பிகையே பெண்களின் கர்ப்பப்பை நோய்கள் மாதவிடாய் கோளாறுகள் குழந்தைப்பேறின்மை போன்ற பிரச்னைகளுக்கு அபயம் அளித்து குணமாக்குகிறாள் என்பது இன்றைய நவீன காலத்திலும் நிதர்சன உண்மை.
அந்தக் காலகட்டத்தில் மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்பட்ட பெண்களுக்கு பொற்றாளம் பூவாய் சித்தர் மருத்துவம் பார்த்திருக்கிறார். எனினும் அவருடைய வைத்தியத்துக்கு எந்தப் பலனும் இல்லாமல் பெண்கள் தொடர்ந்து வேதனையுறுவதைப் பார்த்துக் கலங்கிய பூவாய் சித்தர் இந்தப் பெண்களின் பிரச்னையைத் தீர்க்க மாட்டாயா என்று பாலாம்பிகையிடம் முறையிட்டுள்ளார். அவரின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்த அம்பாள் பூப்படையும் நாள் முதல் மாதவிலக்கு நிற்கும் காலம் வரை பெண்களுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் காத்து அருள்புரிகிறாள்.
அதையும் தாண்டி பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, ரகசிய பிரச்னைகள் இருந்தாலும், குழந்தையின்மை பிரச்னை வந்தாலும் பொற்றாளம் பூவாய் சித்தர் அருள்பாலிக்கும் இடத்தில் தனது குறைகளை கூறி சீட்டு எழுதி கட்டினால் இந்த பிரச்னைகளை நேரடியாக அம்மனிடம் எடுத்து சென்று குறைகளை தீர்ப்பதாக பெண்கள் நம்புகின்றனர். பிரச்னைகளும் முடிவுக்கு வந்து விடுகின்றன என்பது காலம் காலமாய் நிகழும் அதிசியமாகும்.
பெண்களுக்கு வெளியில் சொல்ல முடியாத இது போன்ற பிரச்னைகளை பொற்றாளம் பூவாய் சித்தரிடம் முறையிட தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். கோயிலிலேயே பிரார்த்தனை சீட்டு விற்கப்படுகிறது. அதை வாங்கி நமது மன உடல் ரீதியான பிரச்னைகளை எழுதி அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றித் தருமாறு சுவாமி அம்பாள் மற்றும் சித்தரை வேண்டி பூவாய் சித்தர் தூணில் கட்டிவிட வேண்டும்.
பின்பு கோயிலில் வழங்கப்படும் படத்தினை வீட்டில் பூஜையறையில் வைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதமிருந்து ஒரு டம்ளர் பாலை சுவாமி படத்தின் முன் வைத்து வழிபட வேண்டும். பிறகு நிவேதனம் செய்த பாலில் சிறிது விபூதி பிரசாதத்தைப் போட்டு குடித்துவிட வேண்டும். இதுபோல தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும். இடையிலே ஒரு வாரம் தடைபட்டால் கூட மறுவாரத்திலிருந்து தொடர்ந்து செய்யலாம். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு கைமேல் பலன் நிச்சயம் உண்டு.