ஒரு மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்த அம்மையும் குஞ்சும் வாட்ஸ் ஆப் குரூப்..! பெண் எம்எல்ஏவின் நெகிழ வைத்த செயல்!

கேரளாவில் இருக்கும் அரன்முல தொகுதி எம்எல்ஏ வீணா ஜார்ஜ் என்பவர், "அம்மையும் குஞ்சும்" என்ற வாட்ஸ்அப் குழுவை அமைத்து கர்ப்பிணி பெண்களுக்கும், தாய் சேய்களுக்கும் வேண்டிய உதவியை உடனடியாக பெற்றுத்தந்து மக்களின் மனதை கவர்ந்து வருகிறார்.


ஊரடங்கு உத்தரவால் கர்ப்பிணி பெண்களும், தாய்மார்களும் குழந்தைகளும் போதிய மருத்துவ வசதி பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் கேரள மாநிலத்தை சேர்ந்த ரின்சி என்ற கர்ப்பிணி பெண்ணும் தன் கணவருடன் பத்தனம்திட்டாவில் வசித்து வந்துள்ளார். மார்ச் மாதத்தின் பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அப்போது நிலவி வந்த ஊரடங்கு உத்தரவால் அவரால் தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனே இது குறித்து அந்த தொகுதி எம்எல்ஏ வீணா ஜார்ஜை அழைத்து உதவி கேட்டிருக்கிறார்.

ரின்சியின் வேண்டுகோளை கேட்டுக்கொண்ட எம்எல்ஏ வீணா ஜார்ஜ், நிச்சயம் தான் உதவி செய்வதாக உறுதியளித்திருக்கிறார். ஆனால் வின்சியின் தாயார் வீடு கண்ணூர் மாவட்டத்தில் இருந்துள்ளது. அந்த சமயத்தில் கண்ணூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தமையால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான ரின்சியை அங்கு அனுப்ப முடியாது என்று வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இதனை அடுத்து ரின்சியை அவர் வசித்து வரும் வாய்வழி பகுதியிலேயே மருத்துவமனை ஒன்றில் அவரை அனுமதித்து அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து தர பெண் ஒருவரை பணியமர்த்தி இருக்கிறார் எம்எல்ஏ வீணா ஜார்ஜ். 

இதனையடுத்து அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியான ரின்சிக்கு தேவையான எல்லா வித உதவிகளும் செய்து தந்திருக்கிறார். இதேபோல் உள்ள மற்ற கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் ஆலோசனைகளை பெற முடியாமலும் அவதிப்பட்டு வருவதை எம்எல்ஏ வீணா ஜார்ஜ் உணர ஆரம்பித்தார். உடனே அவர் யோசித்து அம்மையும் குஞ்சும் (தாயும் குழந்தையும்) என்று குழுவை வாட்ஸப்பில் உருவாக்கினார். இதன் மூலம் ஆலோசனைகள் தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் இந்த குழுவில் இணைந்து, தேவையான அனைத்தையும் மருத்துவர்கள் இடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

இதுவரை இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் இணைந்துள்ளனர். இதேபோல் மகப்பேறு மருத்துவர்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள் மனநல மருத்துவர்கள் என மருத்துவ துறையை சேர்ந்த பல மருத்துவர்களும் இந்த குழுவில் இணைந்துள்ளனர். இந்த குழுவின் மூலம் உதவி தேவைப்படும் பல நபர்களுக்கு இதுவரை எம்எல்ஏ வீணா ஜார்ஜ் உதவி செய்திருக்கிறார். இந்த வாட்ஸ் அப் குழு எந்த ஒரு அலைச்சலும் இல்லாமல் நோயாளிகள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை மருத்துவர்களிடம் இருந்து நேரடியாகப் பெற பாலமாக அமைந்து இருந்தது. இதைப் பயன்படுத்திய பலரும் எம்எல்ஏ ஜார்ஜுக்கு தங்களுடைய மனமார்ந்த நன்றியை கூறி வருகின்றனர். இதன் மூலம் அவர் , மக்கள் மனம் கவர்ந்த எம்எல்ஏவாக வலம் வருகிறார்.