வெள்ளை சட்டையுடன் அரசியல் மேடை ஏறிய ஸ்டாலின் மருமகன்! திமுகவின் அடுத்த வாரிசு?

லால்குடி: மு.க.ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன், நேரடி அரசியலில் இறங்குவது உறுதியாகியுள்ளது.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஏற்கனவே, நேரடி அரசியலில் இறங்கிவிட்டார். இந்நிலையில், ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனும் முழுநேர அரசியல்வாதியாக களம் இறங்க தீர்மானித்துள்ளாராம். சமீப காலமாக, திமுக தொடர்பான உள்கட்சி விவகாரங்களில் இருந்து தேசிய அளவிலான விவகாரங்கள் வரைக்கும் சபரீசன் உதவியுடனே, மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இதற்காகவே, டெல்லியில்  சபரீசனுக்கு தனி அலுவலகம் திமுக சார்பாக, செய்துதரப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் ராகுல், சோனியா காந்தியை ஸ்டாலின் சந்தித்தபோது நடுவில் சபரீசனும் நிற்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது பலருக்கும் நினைவிருக்கலாம். 

அப்போதே, திமுகவின் டெல்லி சார்ந்த பணிகளை சபரீசன்தான் மேற்கொள்வார் என்றும், கனிமொழியின் ஆதிக்கத்தை குறைக்கும் முயற்சி இது என்றும் தகவல்கள் கூறப்பட்டன. இந்நிலையில்தான், திமுக.,வின் குடும்ப வாரிசுகளில் குறிப்பிடத்தக்க நபரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது தாத்தா அன்பில் தர்மலிங்கத்தின் நூற்றாண்டு விழாவை, லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் கொண்டாடினார்.

இதில், ஸ்டாலின் பங்கேற்று, அன்பில் தர்மலிங்கம் சிலையை திறந்து வைத்தார். இதன்போது, ஸ்டாலின் மகன் உதயநிதி, அவரது மகன் சபரீசன் ஆகியோருக்கு நேரடியாகவே மேடையில் முக்கியத்துவம் தரப்பட்டது.

இது கட்சி நிர்வாகிகளிடையே உற்று கவனிக்கப்படும் விசயமாக மாறியுள்ளது. உதயநிதிக்குச் சம உரிமை உள்ள நபரைப் போல சபரீசன் செயல்படுவதால், அவருக்கு ஏதேனும் முக்கிய பொறுப்பு விரைவில் தரப்படலாம், என திமுக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.