இலங்கைத் தமிழர்களுக்கு உதவியர்களில் முதன்மையான தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். விடுதலைப்புலிகள் வலிமை பெறவும், வளர்ச்சி அடையவும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் ஏராளம்.
பிரபாகரனை மகனாக நினைத்தவர் எம்.ஜி.ஆர்.! விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர். என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?
அதனால்தான் உலகமெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் வீட்டில் இன்றும் எம்.ஜி.ஆர். படம் தொங்குகிறது.
ஆரம்பகாலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் புரட்சித்தலைவர் ஒரே மாதிரியாகப் பார்த்து உதவி செய்தார். ஆனால், தமிழ் ஈழத்தை வென்றெடுக்கும் சக்தி பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்துகொண்டார். அதனால், பிரபாகரனை தன்னுடைய சொந்த மகன் போன்று கருதியவர் எம்.ஜி.ஆர்.
1982ம் ஆண்டு சென்னை பாண்டிபஜாரில் பிரபாகரனும் முகுந்தனும் மோதிக்கொண்ட நேரத்தில் தமிழக காவல் துறை இவர்களை கைது செய்தது. போராளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும என்று சிங்கள காவல் படை சென்னைக்கு வந்தது. ஆனால், புரட்சித்தலைவர் பிரபாகரனை ஒப்படைக்க உறுதியுடன் மறுத்துவிட்டார். அன்று புரட்சித்தலைவர் பிரபாகரனை சிங்களரிடம் ஒப்படைத்திருந்தால், சிங்கள சிறையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்று பிரபாகரன் உயிரும் போயிருக்கும்.
பிரபாகரன் இலங்கைக்கு தப்பிச்செல்வதற்கு புரட்சித்தலைவர் மறைமுகமாக உதவி செய்தார் என்பதும் உண்மையே. புலிகளின் போராட்டம் வெல்வதற்கு ஆயுதம் வாங்குவதற்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் பணத்தை வெளிப்படையாகக் கொடுத்தவர் புரட்சித்தலைவர்.
அரசு பணத்தைக் கொடுப்பதற்கு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி எதிர்ப்பு தெரிவித்தபோது, காசோலையைக் கிழித்துப் போடுங்கள், சொந்த நிதியில் இருந்து பணம் தருகிறேன் என்று அள்ளிக் கொடுத்தார் புரட்சித்தலைவர். 1984ம் ஆண்டு ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தமிழகத்தில் தீவிரமான போர் பயிற்சி அளிக்கப்பட்டன. புரட்சித்தலைவர் அனுமதியுடனே இது நடைபெற்றது.
ராஜீவ் காந்தி இலங்கையுடன் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்காக புரட்சித்தலைவர் உதவியை நாடினார். டெல்லி அசோகா ஓட்டலில் புரட்சித்தலைவர் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பிரபாகரனை தமிழ் மாகாண முதல்வர் ஆக்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. புரட்சித்தலைவரிடம் அந்த வாய்ப்பை பிரபாகரன் மறுத்தார். அந்த வீரத்தை போற்றி, அந்த முடிவை மதித்தார் எம்.ஜி.ஆர்.
சென்னை துறைமுகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது, அதை வெளியே எடுப்பதற்கு முதல்வர் பதவியை பயன்படுத்துவதற்கு புரட்சித்தலைவர் தயங்கவே இல்லை.
திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரைத் துறந்தபோது, அதற்காக வருந்தி தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் அஞ்சலி செலுத்தியவர் புரட்சித்தலைவர். ஈழத்தமிழர்களுக்காக கருப்புச்சட்டை அணிந்ததுடன் மட்டுமில்லாமல், அமைச்சர்களையும் கருப்புச்சட்டை அணியவைத்தவர் புரட்சித்தலைவர்.
இந்திய ராணுவம் விடுதலைப்புலிகளுடன் மோதுவதைக் கண்டு வருந்தியவர் புரட்சித்தலைவர். ராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 17.10.1987 அன்று முழு கடையடைப்பு நடத்தி இந்திய அரசின் துரோகத்துக்கு துணிந்து எதிர்ப்பு தெரிவித்தவர் புரட்சித்தலைவர்.
இந்திய அமைதிப்படை வட இலங்கையில் இருந்த நேரத்திலும் 40 லட்சம் ரூபாய் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் புரட்சித்தலைவர் மரணம் பிரபாகரனை நிலைகுலையச் செய்தது ‘தங்கள் இழப்பு தமிழீழ மக்களின் மார்பில் தீ மூட்டுவது போல் உள்ளது. தமிழீழ போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்று பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.