வேறு ஜாதி இளைஞருடன் காதல் திருமணம்! மகளை எரித்து சாம்பலை ஆற்றில் கரைத்த கொடூர பெற்றோர்!

காதல் திருமணம் செய்த மகளை அடித்துக் கொலை செய்து எரித்து பின்னர் சாம்பலை கரைத்த பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


  தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் தலமடுகு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அனுராதா. இவரும்  அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமி ராஜன் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மகளை வீட்டிலேயே சிறை வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுராதா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்போதே வாட்ஸ் ஆப் மூலம் தகவலை பரப்பினார்

  இதனை தொடர்ந்து காதலன் லட்சுமி ராஜன் காதலி அனுராதாவை ரகசியமாக அழைத்துக் கொண்டு ஐதராபாத் சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள ஆர்யசமாஜ் என்ற மையத்தில் வைத்து காதலி அனுராதாவை, லட்சுமி ராஜன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறிது நாட்கள் அங்கேயே இருந்த காதல் தம்பதிக்கு அங்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சொந்த ஊருக்கே திரும்ப முடிவு செய்துள்ளனர்.

  அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஜோடியாக அனுராதாவும், லட்சுமி ராஜனும் தலமடுகு கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். காதலனுடன் சென்ற மகள் தங்கள் ஊருக்கு வந்துள்ளதை அறிந்த பெற்றோர், தங்கள் உறவினர்கள் படை சூழ அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் வீட்டை சூறையாடியதுடன் மகள் அனுராதாவையும் தர தரவென இழுத்துச் சென்றுள்ளனர். மறுநாள் தனது மனைவியை தேடி லட்சுமி ராஜன் சென்றுள்ளார்.

  ஆனால் லட்சுமி ராஜனையும் அனுராதா பெற்றோர் அடித்து துரத்தியுள்ளனர். இந்த நிலையில் தான் வீட்டிற்கு அழைத்து வந்த மகள் அனுராதாவை அவரது பெற்றோர் அடித்தே கொலை செய்துள்ளனர். பின்னர் அனுராதாவை எரித்து, அருகில் உள்ள ஆற்றில் சாம்பலையும் கரைத்துள்ளனர். இதனை அறிந்து துடித்துப் போன லட்சுமி ராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அனுராதா அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அனுராதாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அடுத்தடுத்து அரங்கேறும் ஆணவக் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.