காதலின்னா அது ஈவாதான்… ஹிட்லரின் காதலை தெரிஞ்சுக்கோங்க – காதலர்தின சிறப்புக் கட்டுரை!

ஹிட்லரை கொடுங்கோலனாக, மனித உயிர் குடிப்பவனாகத்தான் மக்களுக்குத் தெரியும். அவனும் ஒரு காதலன் என்பது தெரியுமா?


ஹிட்லரின் மனசுக்குள்ளும் ஒரு காதல் இருந்தது என்பதை விலாவாரியாக விளக்குகிறார் காதல் குரு. இதோ அவர் சொல்வதைக் கேளுங்கள். ஹிட்லர் எப்பேர்ப்பட்ட கொடுங்கோல் ஆட்சி செய்தார்ன்னு உங்க எல்லோருக்கும் தெரியும்.

ஆனா சின்ன வயசுல அவரோட ஆசை ஒரு ஓவியரா வர்றதுதான். அவரோட 16 வயதில் ஒரு மாடல் பெண்ணை மனமார காதலிச்சார். ஆனா, அந்த முதல் காதல்  நிறைவேறலை, ஓவிய ஆசையும் பலிக்கவில்லை. 

அதுக்கப்புறம்தான் ராணுவத்தில் சாதாரண சிப்பாயா நுழைஞ்சு கொஞ்சம்கொஞ்சமா போராடி ஜெர்மனியின் அதிபரா உயர்ந்தார். ஜெர்மனியின் நன்மைக்காகன்னு தினம்தினம் மனுஷங்களை கொன்று குவிச்சிக்கிட்டிருந்த ஹிட்லர், அவரது 40வது வயதில் சந்தித்த பெண்தான் ஈவா. 

அப்போது அந்த பெண்ணுக்கு 17 வயது. ஒரு புகைப்பட ஸ்டூடியோவில் நடந்த முதல் சந்திப்பில் அங்கு வேலை பார்த்த ஈவா, அந்த சாத்தான் கண்களுக்குத் தேவதையாகத் தெரிந்தாள். உடனே ஹிட்லரின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பட்டாள்.

அவள் ஒருத்தியின் கண்களுக்கு மட்டும்தான் ஹிட்லரின் இதயத்தில் பூக்களும் இருந்தது தெரிந்தது. ஹிட்லரின் அலுவலகத்தில் ஈவா இருந்தாலும், அவர் எந்நேரமும் அதிகாரிகள் புடைசூழ இருந்ததாலும், உலகப்போர் விவகாரங்களில் தீவிரமாக இருந்ததாலும் அவர்கள் ஒன்றாக பேசவோ, காதலிக்கவோ நேரம் வாய்க்கவில்லை.

அதற்கு மட்டும் நேரம் கிடைத்திருந்தால் ஹிட்லர் அத்தனை கொடூரனாக மாறியிருக்க மாட்டான் என்பது மட்டும் உறுதி. ஆனா அவங்க தனியா இருக்கவும் இறுதியில் ஒரு காலம் வந்தது.

ஆம். அது 1945 ஏப்ரல் மாதம்.

பெர்லின் மீது பிரிட்டிஷ் விமானங்கள் குண்டு மழை பொழிவதை, தன்னுடைய சுரங்க மாளிகையில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் ஹிட்லர். ரஷ்யப்படைகள் பெர்லினில் காலடி பதிப்பதை அறிந்ததும், முக்கிய தளபதிகளை சுரங்க மாளிகையில் இருந்து வெளியேற பணித்தார். ஈவாவையும் அவர்களுடன் தப்பித்துச் செல்ல வேண்டினார். 

ஆனால் ஈவா, ஹிட்லரின் கைகளை பிடித்துக்கொண்டு, ‘கடைசி வரை உங்களோடு தான் இருப்பேன்’ என்று உறுதியுடன் சொன்னாள். 

அப்படியொரு பேச்சைக் கேட்டு அதிர்ந்த ஹிட்லர் வாழ்வில் முதன்முதலாக எல்லோர் முன்னிலையிலும் ஈவாவின் உதட்டில் முத்தமிட்டார். அந்த தருணத்தில்தான் ஈவா-வை மணப்பதாகவும் முடிவெடுத்தார். 1945 ஏப்ரல் 28, இரவு 11.55க்கு அவர்களது திருமணம் நடந்தது. 

எதிரிகள் அருகே வந்துவிட்ட ஏப்ரல் 30 மதியம் 3:30. ஹிட்லர் மரணத்தை காணக்கூடாது என முடிவெடுத்த ஈவா முதலில் சயனைட் விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். காதலியின் மரணத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட ஹிட்லர், தன் கைத்துப்பாக்கியால் வலது நெற்றி பொட்டில் சுட்டுக்கொண்டு உயிரை விட்டார்.

தங்களின் உடல்  எதிரியின் கைகளில் சிக்கக்கூடாது என ஹிட்லர் கேட்டுக் கொண்டிருந்ததால், உடன் இருந்தோர் இருவரின் உடலையும் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். தொடர்ந்து 3 மணி நேரம் எரிந்து சாம்பலானது காதல். 

அன்று மட்டும் ஈவா தப்பி வெளி வந்திருந்தால்... ஈவா பிழைத்திருப்பாள். ஆனால் காதல் செத்துப் போயிருக்கும்.