சிவனின் உடலில் பூசியிருக்கும் சாம்பல் உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா?

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகியவர்களில் ஒருவரான சிவபெருமானுக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லாததால், இவரை முடிவற்ற மகாதேவா எனவும் அழைப்பார்கள். சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.


ஆடம்பர அலங்காரம் ஏதும் இல்லாமல், இடுப்பைச் சுற்றி இடது தோள்பட்டை வரை புலித்தோல் ஆடை, கழுத்தை சுற்றி பாம்பு, ஜடாமுனியில் அரை நிலவு, திரிசூலம் மற்றும் உடல் முழுவதும் பூசப்பட்ட சாம்பல் என எளிமையான தோற்றத்தில் காணப்படும் சிவபெருமானின் ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஒவ்வொரு காரணங்கள் கூறப்படுகின்றது.

அவர் உடலில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் விடாமுயற்சி, அமைதி, பயம், நேரம் மற்றும் காமம் ஆகியவற்றை வெல்வதைக் குறிக்கும். அதே போல் அவர் உடல் முழுவதும் பூசிக்கொண்டுள்ள சாம்பல் முதன்மையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இறந்தவர்களுடன் ஆத்ம ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளது.

இறந்த பின்னர் எஞ்சியிருப்பது சாம்பல் என்ற இந்த புனிதமான விபூதி தூய்மையைக் குறிக்கும். இந்த சாம்பல் உணர்ச்சிகள், காமம், பேராசை மற்றும் பயம் போன்ற பூலோக தொடர்புகளுக்கு அப்பாற்பட்டது. சிவபெருமான் தன் உடல் முழுவதும் இந்த சாம்பலை பூசிக்கொள்வது, இறந்தவர்களின் தூய்மையைப் பறைசாற்றுவதாக அமையும்.

புராணங்களின் படி, பெரும்பாலான தன் நேரத்தை இடுகாட்டில் பிணங்களுடன் செலவழிக்கிறார். அதற்கு காரணம், இவ்வழியில் தான் அழித்தவர்களின் கடுந்துயரைப் போக்கலாம் என அவர் நம்புவதாக கூறப்படுகின்றது. மனிதர்களின் பிறப்பு மற்றும் வாழ்விற்கு பொறுப்பான பிரம்மா மற்றும் விஷ்ணுவை போல் அல்லாமல், அவர்களை அழிக்கும் கடவுளாக உள்ள சிவன் அவர்களை எப்போதுமே தன்னில் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்வதற்காக இறந்தவர்களின் சாம்பலை தன் உடலில் பூசிக்கொள்வதாகவும் கூறப்படுகின்றது.

இவர் சாம்பலை உடல் முழுவதுமாய் பூசிக் கொள்வதற்கு காரணம் ஒரு புராண கதையொன்றில் கூறப்பட்டுள்ளது. ஆதிசக்தியின் அவதாரமான மற்றும் தன் முதல் மனைவியுமான சதி, தன்னை தானே தீக்கிரையாக்கிக் கொண்ட போது, சிவபெருமானால் தன் ஆத்திரம், வலி மற்றும் வேதனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவரின் பிணத்தை எடுத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் ஓடினார்.

அப்போது விஷ்ணு பகவான் சதியின் பிணத்தை தொட்டவுடன் அவர் சாம்பலாகி போனார். தன் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத சிவபெருமான், அவர் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உடல் முழுவதும் தன் மனைவியின் சாம்பலை பூசிக்கொண்டார். இதனால் தான் சிவன் சாம்பல் நிறத்துடையான் என்று போற்றப்படுகின்றார்.