சூரிய பகவானின் சாபம் நீக்கிய தலம் – இறைவனே விதை விதைத்த தலம்

இந்திரப் பதவியில் இருந்த தேவராஜன், விஷிராகரன் என்ற அசுரனைக் கொன்றான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது கொடி வடிவில் அது தொடர்ந்து துன்புறுத்தியது. இதையடுத்து தேவேந்திரன், தொஷ்டா என்பவரை இந்திரப் பதவியில் அமர்த்தி விட்டு பூலோகம் சென்றான்.


தொஷ்டா தனது புதல்விகளான சாயை, சுவைச்சளை இருவரையும், சூரியனுக்கு மணம் முடித்து வைத்தான். சூரியனின் பிரியம் சுவைச் சளையிடம் மட்டுமே இருந்தது. சாயை தேவியிடம் பாராமுகமாய் நடந்து கொண்டான் சூரியன். இந்த தகவலை நாரதர் மூலம் அறிந்த தொஷ்டாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. சூரியனை ஒளி இழக்கும்படி சபித்தான்.

தன்னுடைய சாபம் நீங்குவதற்காக சூரியன், தன் தேவியுடன் பூலோகம் அடைந்தான். சமீவனநாதரை நோக்கி தவம் செய்து வணங்கி, லிங்கத்திற்கு மேல் பாகத்தில் தாமரை ஓடை உண்டாக்கி, அந்த நீரால் இறைவனை வணங்கித் துதித்தான். அவனது பிரார்த்தனை பலித்தது. சமீவன நாதர் அவன் முன் தோன்றி, அவனது சாபத்தை நீக்கியருளினார். சூரியனும் அவரை மகிழ்வோடு வணங்கி ‘நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என்னால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம், என் பெயரால் ‘சூரிய புஷ்கரணி’ என்று அழைக்கப்பட வேண்டும். அதில் நீராடுபவர் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட வேண்டும். தங்களுக்கும் என் நாமத்தால் பெயரிடப்பட வேண்டும். எனக்கு இரு பிள்ளைகள் பிறக்க வேண்டும்’ என்று கேட்க, சமீவனநாதரும் அவ்வாறே அருளினார்.

இதன்படி இத்தலத்து இறைவன் பாஸ்கரலிங்கம் என்றும், தீர்த்தம் சூரிய புஷ்கரணி எனவும், தலம் பாஸ்கர ஷேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.

காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் பார்வதீஸ்வரர்தான் இந்த பெருமைக்கும் பெயருக்கும் உடையவர். இங்கு அருள்பாலிக்கும் இறைவி பெயர், சுயம்வரத பஸ்வினி என்பதாகும். ஆலயம் அமைந்துள்ள இடம் ‘திருத்தெளிச்சேரி’ எனவும், ‘கோவில் பத்து’ எனவும் அழைக்கப்படும் இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு. இத்தலம் கிரேதாயுகத்தில் ‘சமீவனம்’ எனவும், துவாபர யுகத்தில் ‘ஆனந்தவனம்’ எனவும் அழைக்கப்பட்டு, இந்த கலியுகத்தில் ‘முக்தி வனம்’ என அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு திருத்தெளிச்சேரி என்று பெயர் வந்ததற்கு காரணம் உண்டு. ஒரு சமயம் சோழ வள நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. ஊர் எங்கும் மக்கள் பசி பட்டினியால் தவித்தனர். அதனால் இசுவாகு வம்சத்தில் வந்த அரசன் ஒருவன், இத்தல இறைவனை வழிபட்டு மக்களின் வேதனையை போக்கும்படி வேண்டி நின்றான். கருணை கொண்ட இறைவன் மழை பொழியச்செய்தார். பின் இறைவனே உழவனாக வேடங்கொண்டு விதை தெளித்தார். இதனால்தான் இத் தலம் திருத்தெளிச்சேரி என அழைக்கப் படுகிறது. இன்றும் ஆனி மாதம் ‘விதை தெளி உற்சவம்’ இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இறைவன்-இறைவி எதிரே உள்ள சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளி, விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். பின்னரே விவசாயிகள் விதை தெளிக்கத் தொடங்குவர்.

பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை வழிபட்டு, அவரையே மணந்து இறைவனை அடைந்த தலம் இது. எனவே கன்னியர் தாங்கள் விரும்பும் கணவரை அடைய இத்தல இறைவன் அருள்புரிவார் என பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரமும், அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வட திசையில் இறைவி சுயம்வர தபஸ்வினியின் சன்னிதி உள்ளது. அன்னை நான்கு திருக்கரங்களுடன் தென்திசை நோக்கி காட்சி அளிக்கிறாள். திருச்சுற்றில் மேற்கில் வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமி, தெற்கில் நடராஜர்- சிவகாமி, வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் பைரவர், சூரியன், ரேணுகாதேவி, சனீஸ்வரர், பிடாரி அம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இதனை அடுத்து மகாலிங்கமும், தெற்கில் அறுபத்து மூவர் திருமேனிகளும் உள்ளன. தேவக் கோட்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். வடகிழக்கில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது.

இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. நவராத்திரியின் போது இறைவன்-இறைவிக்கு 9 நாட்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 10-ம் நாள் அம்பு போடும் வைபவம் நடைபெறும். திருக்கல்யாணம், சங்காபிஷேகம், கடைஞாயிறு, வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, புனர்பூசம், திருவோணம், கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை தீபம், பிரதோஷம், ஐவர் ஐக்கிய உற்சவம் ஆகியவை திருவிழா நாட்களே.

தனது தல யாத்திரையின் போது திருஞானசம்பந்தர் சமீவனமான இந்தப் பகுதிக்கு வந்தார். அதுசமயம் சோழநாட்டை வீரசோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் சைவத்தின் பெருமை உணராது வேறு ஒரு பிரிவினரை ஆதரித்து வந்தான். அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம், ‘நீங்கள் ஈசனைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்வது உண்மையானால்.. தீயால் காய்ச்சப்பட்ட பீடத்தில் அமர்ந்து அதனை மெய்ப்பித்துக் காட்டுங்கள். ஒரு வேளை நீங்கள் தோற்றுவிட்டால் உங்களை கழுமரத்தில் ஏற்றுவேன்’ என்றான்.

அதற்கு சம்மதித்த சம்பந்தர், சிவபெருமானை வேண்டிக்கொண்டு ‘வேதங்கள் உண்மையானால், திருநீறு மற்றும் ருத்ராட்சங்கள் அழியாதவை என்பது உண்மையானால், பரமசிவம் ஒருவனே மூல முதல் பொருள் என்பது உண்மையானால், எனக்கு எந்த சிறு துன்பமும் நேராமல் இருக்கட்டும்’ என்று கூறிக்கொண்டே தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்தார். அவருக்கு எந்தவித தீங்கும் நேரவில்லை. வியப்பில் ஆழ்ந்த மன்னன் வீர சோழன், சம்பந்தர் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். அவரிடம் உபதேசம் பெற்றான்.

இத்தலத்தில் நடைபெறும் சூரிய பூஜை மிகவும் விசேஷமானது. இங்குள்ள இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றான் அல்லவா? அதனால் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அஸ்தமனச் சூரியன், தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சியை இங்குக் காணலாம். அந்த நாட்களில் சூரிய பூஜை வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. சூரியனின் கதிர்கள், மூலவரின் கருவறை வழியாக சிவபெருமானின் சிரசில் படும். அது சமயம் தாமரை மலர் கொண்டு மூலவருக்கு சோடச ஆராதனைகளுடன், அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான தீர்த்தங்கள் எதிரே உள்ள சூரிய புஷ்கரணியில் இருந்தே கொண்டு வரப்படும்.

ஆலயத்தின் தலவிருட்சம் வன்னி மற்றும் வில்வ மரமாகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். காரைக்கால் பேருந்து நிலையத்தின் அருகில் கோவில்பத்து என்றழைக்கப்படும் இடத்தில் இந்த திருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது..