முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு இப்படிப்பட்ட சிறப்பு இருக்கிறதா..?

கந்தனின் சிறப்பான விரத நாட்கள் சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம் மற்றும் கந்தசஷ்டி விரதமாகும். இந்த மூன்று விரதங்களில் கந்தசஷ்டி விரதமே மிகச்சிறந்த விரதமாகும். இந்த கந்தசஷ்டி விரதத்தில் முருகனை வழிபடுதல் சிறந்தது.


திருச்செந்தூர் தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த பெருமையை கொண்டாடும் விழாவையே கந்தசஷ்டி என்று கூறுகிறோம். சஷ்டி என்பதற்கு ஆறு என்று பொருள். அதாவது, ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்தசஷ்டி காலமாகும். அந்த வகையில் கந்தசஷ்டி விரதம் கடந்த திங்கட்கிழமை (28.10.2019) தொடங்கி, நவம்பர் 02ம் தேதி அன்று சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.

முருகப்பெருமான் சிறப்பாக வாழும் இடங்களான அறுபடை வீடுகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

திருப்பரங்குன்றம் : முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படைவீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். அசுரனை வென்ற முருகன் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா (28.10.2019) திங்கட்கிழமையன்று விமர்சையாக தொடங்கியது.

திருச்செந்தூர் : திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இத்தலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடமாகும். இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் (28.10.2019) திங்கட்கிழமையன்று தொடங்கியது.

பழனி : பழனி, முருகனின் மூன்றாம் படைவீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகன் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனிì ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.

பழனி முருகப்பெருமான் கோவிலில், காப்புக் கட்டுதலுடன் (28.10.2019) திங்கட்கிழமையன்று கந்தசஷ்டி விழா தொடங்கியது.

சுவாமிமலை : சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடாகும். முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று. தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.

சுவாமிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் (28.10.2019) திங்கட்கிழமையன்று தொடங்கியது.

திருத்தணி : திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடாகும். முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.

திருவள்ளார் மாவட்டம் திருத்தணி மலை மீது உள்ள முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா கோலாகலமாக (28.10.2019) திங்கட்கிழமையன்று தொடங்கியது.

பழமுதிர்சோலை : பழமுதிர்சோலை, முருகனின் ஆறாம் படைவீடாகும். இதற்கு திருமலிருஞ்சோலை, குலமலை, கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவையாருக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்சோலை என்று பெயர் பெற்றது. இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு.

பழமுதிர்சோலை முருகன் கோவிலில், மேளதாளம் முழங்க காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா (28.10.2019) திங்கட்கிழமையன்று தொடங்கியது. கந்தசஷ்டி விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் வந்து முருகப்பெருமான் அருள்பாலிப்பார்.