பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தது வெட்டுக்கிளிகள் படை..! 3 மாநிலங்களில் பதற்றம்! விவசாயிகள் அதிர்ச்சி!

ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பாகிஸ்தானில் விவசாயப்பணிகளில் பேரழிவை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள் படை இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது.


பாலைவன வெட்டுக்கிளிகள் பெரும் கூட்டமாக சென்று விவசாயப்பயிர்களை தங்களது உணவாக்கிக் கொள்வது வழக்கம். இவ்வாறு வெட்டுக்கிளிகளால் உணவாக்கப்பட்ட பயிர்கள் பிறகு நாசமாவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. சுமார் 50 கி.மீ பரப்பளவிற்கு கூட ஒரு வெட்டுக்கிளிகள் படை இருக்கும்.

ஆப்ரிக்க நாடுகளில் இந்த வெட்டுக்கிளிகள் படை ஏற்கனவே ஏராளமான ஏக்கர் பயிர்களை நாசம் செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் பாகிஸ்தானுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் படை அங்கு விவசாயப்பயிர்களை நாசம் செய்து வந்தன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் படை தற்போது மத்திய பிரதேச மாநிலத்திற்குள்ளும் நுழைந்துள்ளது. தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்திற்குள்ளும் வெட்டுக்கிளிகள் படை நுழைய ஆயத்தமாகி வருகின்றன.

பொதுவாக இந்த வெட்டுக்கிளிகள் படைகளை எதைக் கொண்டும் அழிக்க முடியாது. பூச்சி மருந்துகளை பயன்படுத்தினாலும் வெட்டுக்கிளிகளை அழிக்க முடியாது. இவை பயிர்களுக்குள் இறங்கிவிட்டால் நாசம் செய்துவிட்டு தான் புறப்படும். எனவே வெட்டுக்கிளிகள் படையால் மூன்று மாநிலங்களிலும் அரிசி, கோதுமை மற்றும் காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் பதற்றம் அடைந்துள்ளன.

இதனிடையே அதிக அளவிலான சப்தம் இருந்தால் வெட்டுக்கிளிகள் தரையிறங்காது என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் இரவு 7 மணிக்கு பிறகே வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களில் தரையிறங்கும். எனவே அந்த சமயத்தில் டிரம்ஸ் உள்ளிட்ட வாத்தியங்களை அதிக சப்தத்துடன் வாசிக்குமாறு விவசாயிகளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.