சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வேலூரில் நடந்த தற்கொலை குறித்த பதிவு இது.
வாழ்க்கை என்பது சங்கர் படமல்ல! பெண் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டியது இதுதான்?

15 வயது பெண் குழந்தையை பழிவாங்குவதாக எண்ணி அவள் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி இருக்காங்க மூனுபேர். என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தை தற்கொலை செய்து இறந்திருக்கிறது.
துணி மாற்றுவதை யாராவது ஃபோட்டோ எடுத்துட்டா அவமானம், குளிக்கிறது வெளியில தெரிஞ்சா அவமானம், ப்ரா ஸ்ட்ரேப் தெரிஞ்சிட்டா அவமானம், துப்பட்டா விலகிட்டா அவமானம் போன்ற கற்பிதங்களை முதலில் பெற்றோர்கள் உடைக்கவேண்டும்.
பெற்றோர்-ஆசிரியர் தவிர்த்து இந்தப் புரிதலை வேறு யாரும் வளர் பருவ குழந்தைகளுக்கு பகுத்தறிவோடு சொல்லித் தர முடியாது. பெண்ணின் உடல் மீது தொடுக்கப்படும் அநீதிகளுக்கு பெண் எதிர்வினையாற்றவே அவளுக்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. 15 வயதில் அது கண்டிப்பாக இருக்காது. ஆனால் பொறுக்கிகள் அதிகம் கரம் வைப்பதே பதின்வயது பெண்களைத்தான்.
எனவே நிர்வாணம் அசிங்கமல்ல என்ற தெளிவை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். கற்பு - நாணம் போன்ற பழைய கற்பிதங்களை குழந்தைகளுக்கு தயவுசெய்து புகட்டாதீர்கள்.
வாழ்க்கை என்பது சங்கர் படமல்ல. நான்கு பேர் நிர்வாணமாக நம்மை பார்த்து விட்டார்கள் என்பதற்காக போய் பஸ்ஸில் விழுந்து சாக. அதை மீறியும் சாதிக்க இங்கு நிறைய இருக்கிறது.