கடைசியா பார்த்துக்கலாம்! கனிமொழியை தவிக்க விட்ட ஸ்டாலின்..! சிஐடி காலனி பஞ்சாயத்து!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மு.க.ஸ்டாலின் சிஐடி காலனிக்கு செல்லவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் கனிமொழி ஸ்டாலினை நேரில் சென்று சந்திக்காமல் தவிர்த்து வந்தார்.


சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் திமுக ஆட்சி தான் அடுத்து என்கிற நிலை உருவான போது திமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு படையெடுத்தனர். ஆனால் கனிமொழி மட்டும் அங்கு செல்லவில்லை. இதே போல் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்க கொளத்தூர் சென்ற போதும் கனிமொழி அங்கு இல்லை.

தொடர்ந்து கலைஞர், அண்ணா நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கும் கூட கனிமொழி வரவில்லை. இதனை தொடர்ந்து மறுநாள் முதல் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் கனிமொழி சிஐடி காலனி வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. அதே சமயம் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி கனிமொழி வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்று திரும்பினார். இதன் பிறகும் கூட கனிமொழி ஸ்டாலின் வீட்டிற்கு வரவில்லை. இதற்கிடையே முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முதல் நாள் திமுகவின் சீனியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் சீனியர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்று வந்தார். அப்போது தயாநிதி மாறனின் தாயாரை சந்தித்து ஆசி பெற்ற ஸ்டாலின், சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாளை சந்திக்க வரவில்லை.

இதனால் கனிமொழி மிகவும் மனம் உடைந்து போய்விட்டதாக கூறுகிறார்கள். தேர்தலில் வென்ற பிறகு தான் வரவில்லை. ஆனால் உறவினர்களை சந்திக்கச் செல்லும் போது கூடவா நம் வீட்டிற்கு வரக்கூடாது என்று கனிமொழி ஆதங்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து ஸ்டாலின் நேராக கலைஞர் நினைவிடம் செல்வார் என்றார்கள்.

ஆனால் ஸ்டாலின் கோபாலபுரம் சென்று கலைஞர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். இதனை தொடர்ந்தாவது தனது வீட்டிற்கு அண்ணன் வருவார் என்று கனிமொழி காத்திருந்தார்.

ஆனால் கோபாலபுரத்தில் இருந்து நேராக கலைஞர் நினைவிடம் சென்றுவிட்டு பிறகு பெரியார் நினைவிடம் சென்றார் ஸ்டாலின். பிறகு பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு சென்று விட்டு இறுதியாகவே ஸ்டாலின் சிஐடி காலனி வந்து சேர்ந்தார். அதாவது கடைசியாக சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றுள்ளார் ஸ்டாலின்.

ஆனால் ஸ்டாலின் வீட்டிற்கு வந்த புகைப்படத்தையோ தகவலையோ ட்விட்டரில் கனிமொழி வெளியிடவில்லை. இதன் மூலம் ஸ்டாலின் செயலில் அவருக்கு திருப்தி இல்லை என்பது தெரியவருகிறது. ஸ்டாலினை பொறுத்தவரை கனிமொழிக்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டதாக கருதுகிறார்.

எனவே திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் சிஐடி காலனிக்கு தந்தை கலைஞர் இருந்த போது கொடுத்த முக்கியத்துவத்தை கொடுக்க அவர் தயாராக இல்லை என்று தெரிகிறது. ஆனால் கனிமொழியின் எதிர்பார்ப்பு மிக அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள். வேட்பாளர் பரிந்துரையில் தொடங்கி தற்போது அமைச்சரவை பட்டியல் வரை கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு பெரிய அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருக்கும் கனிமொழி ஸ்டாலினும் தங்களை கடைசி இடத்தில் வைத்திருப்பதாக கருதும்பட்சத்தில் எல்லாம் சுமூகமாக இருக்காது என்றே தெரிய வருகிறது.