செல்வத்தை அள்ளித்தரும் குபேந்திரர்! சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சி பொங்கிவழியும்!

சீன தேசத்து வாஸ்து சாஸ்திரங்களில் இடம்பெற்றுள்ள ஒரு வடிவம், சிரிக்கும் புத்தர் எனும் செல்வ குபேரர் சிலையாகும்.


வழுக்கைத் தலை, பெருத்த வயிறு, இடது காதில் பெரிய வளையம், சிரிக்கும் போது மேல் வரிசையில் தெரியும் எட்டு பற்கள், தொப்பைக்குக் கீழே தொள தொள ஆடை, மார்பில் நீண்ட மணிமாலை என காட்சி தரும் இவர் வடிவம் விசித்திரமானது.தொடக்கத்தில் விற்பனைக்கு வந்த சிரிக்கும் புத்தர் சிலைகள் மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி உள்ளங்கைகள் வானத்தி நோக்கியவாறு அமைந்திருந்தன்.

தற்போது, பண மூட்டையை தோளில் சுமந்தவாறு, ஆனந்தமாகத் திண்டில் சாய்ந்த கோலத்தில், பொற்காசுகளின் மீது நின்ற கோலத்தில், குடையைத் தோளில் சுமந்து காட்சி தரும் கோலம் என பல வடிவங்களில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறார்.  இவர் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டில் சந்தோஷம் குடி இருக்கும், பண மழை பொழியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. 

தென்னாட்டில் செல்வத்துக்கு அதிபதியாகவும், எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் விளங்கும் பூதங்களின் மற்றோர் வடிவமே இந்த சிரிக்கும் புத்தர் என்பது சில ஆராய்ச்சியாளர்கள் கருத்தாகும். பூதம் என்றால் மகிழ்ச்சி அல்லது செல்வம் என்று பொருள்.  பாரத தேசத்தில் நிலவி வந்த பூத வழிபாடே சீனா, ஜப்பான் நாடுகளில் பரவி, இத்தகைய புதிய வடிவம் பெற்றுள்ளது என்கின்றனர். 

இந்த சிரிக்கும் புத்தர் சிலை இப்போது வாஸ்து குபேரர் எனும் பெயரைப் பெற்றுள்ளன.  பலரது வீடுகளில் இந்த குபேரரை மஹாலட்சுமியுடன் வைத்து வணங்குகிறார்கள். சில இடங்களில் குபேரர் கோயில்கள் எனும் பெயரில் இவர்களுக்கு தனியே கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.  சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வெளியம்பாக்கத்தில் இத்தகைய செல்வ குபேரர் கோயில் ஒன்று உள்ளது. 

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும். கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும். 

குபேர பொம்மையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.