போய் வாருங்கள் அத்திவரதரே! இன்றுடன் தரிசனம் நிறைவு! கண்ணீரில் காஞ்சிபுரம்!

உலகளவில் மக்களை ஈர்த்த அத்தி வரதர் வைபவம் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் தற்போது நடைபெற்று வருகிறது.


அத்தி மரத்தில் பிரம்மதேவரின் ஆணைக்கிணங்க தேவலோக சிற்பி செதுக்கிய விக்கிரமாக அத்திவரதர் விக்கிரகம் கருதப்படுகிறது. அத்தகைய அத்திவரதர் விக்கிரகம் பல்வேறு சிறப்புகள் மிகுந்த வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் மட்டும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் திருக்குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சயன கோலத்தில் தரிசனம் தந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் தனது பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தந்துகொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் இந்த அற்புத தரிசனத்தை இன்னும் காணாத முதியவர்கள் உட்பட பலர் இருப்பதால், அவர்களும் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு வசதியாக மேலும் 48 தினங்கள் அத்தி வரதர் வைபவம் நீட்டிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அத்தி வரதர் வைபவம் குறித்து முடிவெடுக்கும் உரிமை தமிழக அரசிற்கு தான் உண்டு என்றும், அந்த வைபவத்தை மேலும் நீட்டிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இது குறித்து செய்தியாளர்கள் தமிழக அறநிலையத் துறை அமைச்சரிடம் கேட்டபோது அத்தி வரதர் வைபவம் இத்தனை ஆண்டு காலம் எவ்வாறு ஆகம விதிப்படி நடைபெற்றதோ, அதே போன்று தான் இப்போதும் நடைபெறும் என்றும், எனவே 48 நாட்களுக்கு மேலாக அத்தி வரதர் வைபவம் நீட்டிக்கப்படாது எனவும் திட்டமிட்டபடி வரும் 17ஆம் தேதி அத்தி வரதர் திருவிக்கிரகம் வரதராஜர் கோயிலில் இருக்கும் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்படும் என திட்டவட்டமாகக் கூறினார்.

.இந்நிலையில் அத்தி வரதர் வைபவம் தொடங்கப்பட்ட 47 ஆவது தினமான இன்று மாலை 5 மணியுடன் அனைத்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான அத்தி வரதர் தரிசனம் நிறைவு பெறும் என கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு எந்த ஒரு நபரோ அல்லது முக்கிய பிரமுகர்களோ எக்காரணம் கொண்டும் அத்திவரதர் தரிசனத்திற்காக கோயிலுக்குள்ளாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினத்தில் வி.ஐ.பி பாஸ், 300, 500 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனங்கள் போன்றவை கிடையாது என கூறினார். மேலும் பக்தர்கள் கொண்டு வருகின்ற அரசியல் தலைவர்களின் சிபாரிசு கடிதங்கள் போன்ற எதுவும் ஏற்றுக்கொள்ள பட மாட்டாது என தெரிவித்தார். 48 நாட்களாக அத்திவரதரால் பரபரப்பாக இருந்த காஞ்சிபுரம் இன்று சோகத்தில் மூழ்கியது. சிலர் கண்ணீர் விட்டு அழுததை பார்க்க முடிந்தது.