முதல் குழந்தை பிறந்து 1 மாதத்திற்கு பிறகு இரட்டைக் குழந்தை..! டாக்டர்களை மிரள வைத்த 20வயது பெண்ணின் 2வது கர்ப்ப பை..!

பங்களாதேஷ் நாட்டில் முதல் குழந்தை பிறந்து 26 நாட்கள் கழித்து தற்போது இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண்ணிற்கு இரண்டு கருப்பைகள் உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.


பங்களாதேஷ் நாட்டில் 20 வயது இளம் பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்து 26 நாட்கள் கழித்து அவரின் மற்றொரு கருப்பையிலிருந்து தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அரிஃபா சுல்தானா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து சில நாட்களுக்கு பின்பாக அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். மருத்துவமனையில் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் செய்யப்பட்டுள்ளது. 

அப்போது மருத்துவர்களின் அறிக்கை முடிவில் அந்த இளம்பெண் அரிஃபாவிற்கு இரண்டு கருப்பைகள் இருப்பதும் அதில் இரண்டாவது கருப்பையில் இரட்டை குழந்தைகள் வளர்ந்து வருவதையும் மருத்துவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். அதாவது கடந்த 26 நாட்களுக்கு முன்பாக அரிஃபா முதல் கருப்பையிலிருந்து ஒரு குழந்தையை பிரசவித்து இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து அவருடைய இரண்டாவது கருப்பையில் அவரை அறியாமல் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்திருக்கிறது. இதனைப் பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த குழந்தைகளை அரிஃபாவின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் அறுவைசிகிச்சைக்கு ஒப்புக் கொண்டிருக்கின்றனர். பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளை நல்ல படியாக வெளியே எடுத்துள்ளனர். தற்போது தாயும் அவருடைய மூன்று குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து புது தில்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.என். பாசு, இரண்டு கருப்பைகள் இருப்பது மிகவும் பொதுவானதல்ல என்றும், பொதுவாக கருப்பைகள் இரண்டு குழாய்களில் இருந்து உருவாகும்.

அப்படியாக உருவாகும் பொழுது அந்த குழாய்களின் சுவர்கள் கரைந்து விடும். ஒருவேளை அது கரையாமல் நின்றுவிட்டால் இரண்டு கருப்பைகளை உருவாக்கும். இதுதான் அந்தப் பெண்ணுக்கும் நடைபெற்று இருக்கும் என கூறியிருக்கிறார். 

மிக அரிதான இந்த கர்ப்பப்பையில் இரட்டை கர்ப்பம் நிகழ்வது ஒட்டுமொத்தமாக ஒரு மில்லியனில் ஒன்று என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.