உடுமலை சங்கர் ஆணவக் கொலை! கவுசல்யாவின் தந்தை விடுதலை! தூக்கு தண்டனையும் ரத்து ஏன்! நீதிபதி சொன்ன காரணம்!

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண் கல்லூரியில் தன்னுடன் படித்த வேற்று ஜாதி மாணவர் ஒருவரை தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக கவுசல்யாவுக்கு அவரது பெற்றோர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே கவுசல்யா அவரது கணவரையும் மூன்று பேர் அடங்கிய கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இந்த தாக்குதலில் கவுசல்யாவின் கணவர் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கவுசல்யா உயிர் பிழைத்தார். இது தொடர்பாக அப்போது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் அவரது தாய் மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோரை விடுதலை செய்தது. இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி , ஜெகதீசன் ,மணிகண்டன் ,செல்வகுமார் ,கலை தமிழ்வாணன் ,மதன் என்ற மைக்கேல் ஆகிய ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும் இந்த வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11ஆவது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்து வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை மற்றும் 10 வருட கடுங்காவல் தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்ப்பட்டது. இதில் இரண்டு லட்சம் ரூபாய் கௌசல்யாவுக்கு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. மரண தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை நீதிபதிகள் நிர்மல் குமார் மற்றும் சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கிற்கான தீர்ப்பு நீதிபதிகளால் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல ஒன்பதாவது குற்றவாளி தன்ராஜ் மற்றும் பதினொன்றாவது குற்றவாளியான மணிகண்டன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். 

மேலும் தூக்குத் தண்டனை பெற்ற மற்ற ஐந்து குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.