பஞ்சரத்ன கீர்த்தனை பாடப்பெற்ற ஸ்தலம் இதுதானாம்! திருடர்களை விரட்டி கர்நாடக சங்கீத வித்வான் தியாகைய்யருக்கு உதவிய ராமர்-லட்சுமணர்!

சென்னையின் புறநகர்ப்பகுதியான கோவூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஒரு இந்து ஆலயமாகும்.


இங்குள்ள சுந்தரேஸ்வரர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த ஊரில் வசிப்பவர்கள் காசிக்கே செல்ல வேண்டியது இல்லையாம். காசிக்கு வீசம் அதிகம் என்று பெருமைப்படுத்தப் படும் ஊர் சென்னை போரூர் குன்றத்தூர் சாலையில் அமைந்துள்ள கோவூர்.

மாங்காட்டில் அன்னை சிவனை மணக்க வேண்டி கடுமையான தவத்தில் இருந்தாள். பரமசிவனோ தியானத்தில் இருந்தார். அவள் தவத்தினால் ஏற்பட்ட உஷ்ணத்தினால் உலகம் தகிக்கலாயிற்று. அனைத்தும் கருகலாயின. உயிர் சேதங்கள் துவங்கின. கண்களை மூடியபடி தவத்தில் அமர்ந்து இருந்த சிவபெருமானை எழுப்ப முடியாமல் போன தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று உதவி கேட்க அவர் தனது மனைவி மகாலட்சுமியை அந்த இடத்திற்கு அனுப்பினார்.

லஷ்மி தேவியும் ஒரு பசுவின் உருவில் அந்த இடத்திற்குச் சென்று சிவலிங்கத்தின் மீது தன் மடியிலிருந்து பாலை சுரந்து அபிஷேகித்து சிவனை வேண்ட அவர் கண் திறந்தார். ரிஷப வாகனத்தில் பார்வதிக்கு காட்சி தந்தார். அவர் கண் திறந்ததும் அனைத்து இடங்களும் குளிர்ந்தன. அவருடைய பக்தியை மெச்சிய சிவன் அந்த இடத்திற்கு கோபுரி என பெயரிட்டார். கோ என்றால் பசு, புரி என்றால் இடம். அதுவே பின்னர் மருவி கோவூர் என ஆயிற்றாம்.

இந்த ஆலயத்திற்கு மேலும் சில சிறப்புகள் உண்டு இந்த ஆலயத்தில் மட்டுமே மகாவில்வம் என்று சொல்லக்கூடிய வில்வம் இருக்கிறது. இங்கு மரத்தளம் ஒவ்வொன்றிலும் 5, 7 மற்றும் 9 இலைகளைக் கொண்ட வில்வ மரம் உள்ளதாம். எந்த ஒரு இடத்திலும் ஒரு தளத்தில் மூன்று இலைகள் தான் இருக்கும் ஆகவே இந்த இடத்தில் வந்து அந்த வில்வ இலைகளால் பூஜை செய்பவர்கள் பெரும் பாக்கியத்தை அடைவார்கள்.

இங்குதான் கர்நாடக சங்கீத வித்வான், மகான் தியாகைய்யர் வாழ்வில் ஒரு அற்புதமான சம்பவம் நடந்தது. கோவூர் சுந்தரேச முதலியாரின் வேண்டுகோளுக்கு இணங்க தியாகைய்யர் தன் ஸ்தல யாத்திரையின் போது இங்கு வருகிறார். அவரை வரவேற்று சகல மரியாதைகளையும் செய்து வழியனுப்பி வைக்கிறார் முதலியார்.

அவர் தந்த பணத்தை ஏற்க மறுத்து விடுகிறார் தியாகைய்யர். ஆனால் அவருக்குத் தெரியாமல் பல்லக்கில் வைத்துவிடுகிறார் முதலியார். காட்டு வழியில் செல்லும் பொழுது பல்லக்கை திருடர்கள் சூழ்ந்துகொள்ள அப்போதுதான் உண்மை புலப்படுகிறது மகானுக்கு. அவரைக் காக்க ராம லட்சுமணர்களே இளைஞர்களாக வந்து திருடர்களை விரட்டி அடிக்கிறார்கள்.

வியந்து நெகிழ்ந்து போன தியாகைய்யர், மீண்டும் கோவூருக்கு வந்து இங்கு கோயிலிலுள்ள ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மீது பஞ்சரத்தின கீர்த்தனை என அழைக்கப்படும் ஐந்து கீர்த்தனைகளை பாடியுள்ளார். பரமேஸ்வரனே இங்கு கண்விழித்து கருணை புரிந்ததால் இதுவே காசியை விட உயர்ந்தது. இந்த ஊர்க்காரர்கள் காசிக்கே போக வேண்டியதில்லை என்கிறார்கள்.

இத்தலமே சென்னையில் இருக்கும் புதனுக் குரிய பரிகார தலமாகும். ஜாதகரீதியாக புதன் நீச்சமாக இருப்பவர்கள், இங்கே வழிபாடு செய்து புதனின் அருளை பெற்று மகிழலாம்.