ஆதிசேஷன் மகா விஷ்ணுவிற்கு குடைபிடித்திருப்பது போல கோலாப்பூரில் மகாலட்சுமிக்கு ஐந்து தலை நாகமொன்று குடை பிடித்திருக்கிறது.
மகாலட்சுமிக்கு குடை பிடித்த ஐந்து தலை நாகம்! நாகதோஷம் விலக தரிசனம் செய்யுங்கள்!

இந்த நாகம் யார்? மகாலட்சுமிக்கு ஏன் குடை பிடித்திருக்கிறது? பராசர முனிவர் செய்யும் தவத்தின் உக்கிரத்தால் பாதாள லோகத்தில் இருந்த நாகங்கள் அவதிப்படுகின்றன. மேலோகம் வந்து இங்குள்ள நீர்நிலைகளில் உள்ள நீர் எல்லாம் அருந்தி காலி செய்து விடுகின்றன. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி போய் உயிரினங்கள் அவதிப்படுகின்றன. மரங்களும் செடிகளும் பட்டுப் போகின்றன.
தவத்திலிருந்து எழுகிற பராசரர், நாகங்களை கருடனுக்கு உணவாகும்படி சபித்து விடுகிறார். பயந்துபோன நாகங்கள் வெப்பம் தாங்காமலேயே தாங்கள் அவ்விதம் நடந்து கொண்டதாக தெரிவித்து அவரிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனத்துக்கு வழி கேட்கின்றன. பராசரர் கோலாப்பூர் பகுதிக்குச் சென்று மகாலட்சுமியை வழிபட்டு சாப விமோசனம் பெறச் சொல்கிறார்.
அதன்படி நாகங்கள் மஹாலட்சுமி தேவியை வணங்க, தேவியும் மனம் கணிந்து நீர்நிலைகளை நிரம்பச் செய்து, மரம் செடிகளை துளிர்கச் செய்து உலகை உய்ப்பிக்கிறாள். இதனால் கங்கை யமுனை முதலிய நதிப் பெண்கள் லட்சுமியை வணங்கி நிற்கின்றனர். தேவர்கள் அனைவரும் லட்சுமியை புகழ்ந்து துதிக்கிறார்கள். இந்நிலையில் நாகங்கள் லட்சுமி தேவியைப் பணிந்து தங்களின் கருட பயத்தைத் தெரிவிக்கின்றன.
மகாலட்சுமியும் நாகங்களை கோலாப்பூர் ஸ்தலத்தில் வந்து தங்கச் சொல்லி கருடனை கூப்பிட்டு, நாகங்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று கட்டளையிடுகிறாள். இன்றும் இரவுகளில் நாகங்கள் வந்து இந்த மகாலட்சுமியை வழிபட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது.
இந்த ஸ்தலத்தில் அந்நியர் தாக்குதலின்போது பத்திரப்படுத்தும் பொருட்டு மகாலட்சுமிக்கு பல மன்னர்களும் அர்ப்பணித்திருந்த பல அரிய, அபூர்வ, விலை மதிக்க முடியாத நகைகளை கருவறைக்கு கீழே பூமியில் புதைத்து வைத்திருப்பதாகவும், அவற்றை பாதாள லோகத்தில் இருக்கும் நாகங்கள் காத்து வருவதாகவும் ஒரு நம்பிக்கை.
இங்கே மகாலட்சுமிக்கு குடைபிடித்திருப்பது பத்மாவதி நாகமாம். பத்மாவதி சமண மதத்தவர்களின் நாக தேவதை. ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் சமணமதம் தழைத்திருந்தது என்றும் அப்போது சமணம் பின்பற்றிய சில அரசர்கள் இந்த கோவிலுக்கு வந்து மகாலட்சுமியை வழிபட்டதாகவும் அவர்களே லட்சுமி தேவிக்கு பத்மாவதியை நாகக்குடையை அர்ப்பணித்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இன்றும் இந்தக் கோயிலின் சில சுவர்களில் சமண தீர்த்தங்கர்களின் உருவங்கள் உள்ளன எனும்போது இது உண்மையாக இருக்கலாம். மாற்றுக் கருத்தாக மகாலட்சுமி குடைபிடித்து இருப்பது ஆதிசேஷன் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
கோலாப்பூர் மகாலட்சுமிக்கு பாம்பு விஷம் போன்ற கொடுமையான விஷத்தை இறக்கி வைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஐதீகம். இந்த ஸ்லத்துக்கு வந்து வழிபட்டால் நாக தோஷம், நாக சாபம் விலகும் என்பது நம்பிக்கை.