ராமேஸ்வரம்! 60 புனித தீர்த்தங்கள் 42 தீர்த்தங்களானது உங்களுக்கு தெரியுமா? அவற்றின் மகிமை என்ன தெரியுமா?

ஒன்றல்ல, இரண்டல்ல, 42 தீர்த்தங்கள் ராமேஸ்வரத்தில் இருக்கின்றன. ராமேஸ்வரத்தில் தீர்த்தம் ஆடுவது அவ்வளவு சிறப்பாக கருதப்படுகிறது.


அயோத்தி சென்று முடிசூட்டிக் கொண்ட ராமர் மீண்டும் ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடியதாக ஆனந்த ராமாயணம் கூறுகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்து வங்காளத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு நடந்தே வந்து கடலாடிய பின்புதான் குழந்தைகள் பிறந்தன. பிள்ளை வரம் வேண்டுவோர் இந்தத் தீர்த்தத்தில் குளித்துத் தீர்த்தக் கரையில் உள்ள நாகராஜரை வழிபட வேண்டும் என்று அங்கு எழுதி வைத்து இருக்கிறார்கள். நாக நாதர் கோயிலைச் சுற்றிலும் நிறைய நாகர் சிலைகள் இருக்கின்றன. ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பவர்கள் இங்குக் குளித்து நாக பிரதிஷ்டை செய்தால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

இராமர் தீர்த்தத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மகாபாரதப் போரில் துரோணரின் சாவுக்கு காரணமாக இருந்த தர்மர் அந்தப் பாவம் தீர இந்த ராம தீர்த்தத்தில்தான் குளித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இராமர் தீர்த்தத்திற்கு அடுத்து லட்சுமண தீர்த்தம். அருகில் சீதா தீர்த்தம். பிறகு அனுமன் தீர்த்தம். ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரில் உள்ள கடலை அக்னிதீர்த்தம் என்கிறார்கள். சீதை மீது சந்தேகப்பட்ட ராமர் சீதையை தீக்குளிக்கச் சொன்னார்.  சீதை தீக்குள் இறங்கியதும் சீதையின் கற்புக் கனல் தாளாது அக்கினி ஓடிவந்து இந்தக் கடலில் குளித்துதான் குளிர்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. இங்கே கடலில் ஆழம் இல்லை. அலைகளும் இல்லை.

ராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே 20 தீர்த்தங்கள் உள்ளன. ஆதியில் 64 தீர்த்தங்கள் இருந்தன. பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சேதுபுராணம் 24 தீர்த்தங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. காலவெள்ளத்தில் மண்மூடிப்போக இப்பொழுது 20 தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. இராமேஸ்வரம் கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் இருக்கின்றன. அத்தனையும் கிணறுகள், தெப்பங்கள்.

கோடி தீர்த்தத்தில் குளித்துவிட்டுத் தான் தரிசனத்துக்கு செல்லவேண்டும். சிவாலயத்தின் உள்ளே கோடி தீர்த்தம் இருக்கிறது. நாம் உள்ளே செல்ல முடியாது. உள்ளே இருக்கும் ஐயர் தண்ணீர் எடுத்து ஊற்றுவார். தீர்த்தவாய் வழியாக தண்ணீர் வந்து விழும். நாம் தலையைக் காட்ட வேண்டும். ராமேஸ்வரம் கோவிலின் பாட்டிலில் அடைத்து வைக்கப் படுவது இந்த கோடித் தீர்த்தமே.

இராமரின் வில் நுனியால் குத்தி, ஊற்று உண்டாக்கி, நீர் எடுத்து லிங்கத்துக்கு முழுக்குச் செய்தார். அந்தத் தீர்த்தம் இதுதான். விரல் நுனியால் உண்டாக்கப்பட்டதால் கோடி தீர்த்தம் என்று பெயர் பெற்றது. கம்சனைக் கொன்ற பாவம் தீர கண்ணன் கோடி தீர்த்தத்தில் குளித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.