கிட்னி பெயிலியர்! உயிருக்கு போராடும் காதலனுக்கு உயிர் கொடுக்க முன்வந்த காதலி! அடுத்து நேர்ந்த பரிதாபம்!

காதலன் உயிருக்கு போராடுவதை தாங்க முடியாமல் ராமேஸ்வரம் கோவிலில் விஷம் குடித்த பெண் காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சேலம் மாவட்டம் செந்தூரப்பட்டியை சேர்ந்தவர் செண்பகம். 26 வயதான இவர் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அதே காவல் நிலையத்தில் தன்னுடன் பணியாற்றி வரும் காவலர் ஒருவருடன் செண்பகத்திற்கு காதல் அரும்பியுள்ளது. அந்த காவலரும் செண்பகத்தை காதலித்துளளார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கோவில், குளங்களுக்கு சென்று செண்பகம் தனது காதலை வளர்த்துள்ளார்.

  இந்த நிலையில் செண்பகத்தின் காதலருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சிறுநீரக பாதிப்பு அவருக்கு இருப்பது தெரியவந்தது. இதனால் செண்பகத்தின் காதலரான காவலர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் செண்பகத்தின் காதலரின் உடல் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சிறுநீரகம் கிடைப்பது மிகவும் அரிது என்று சொல்லப்படுகிறது.

   இதனால் செண்பகம் மனம் உடைந்துள்ளார். மனம் ஆறுதல் தேடி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு செண்பகம் சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு மருத்துவமனையில் உள்ள தனது உறவினர்களை தொடர்பு கொண்டு காதலனின் உடல் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு தொடர்ந்து அவர் உடல் நிலை மோசமாகவே உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த செண்பகம் அருகில் உள்ள கடைக்கு சென்று எலி மருந்து வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் கோவிலுக்கு வந்த செண்பகம் தனது உயிரை எடுத்துக் கொண்டு தனது காதலனுக்கு உயிரை கொடுக்குமாறு சுவாமியிடம் கூறிவிட்டு எலி மருந்தை சாப்பிட்டுள்ளார்.

  இதனால் மயங்கிய செண்பகம் அப்படியே கோவில் தரையில் விழுந்துள்ளார். இதனை பார்த்த பக்தர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை கொடுத்து செண்பகத்தை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். சில நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் கூட செண்பகம் உயிரிழந்திருப்பார் என்று மருத்துவர்கள் கூறினர். மேலும் செண்பகம் உயிர் பிழைத்தது மிகப்பெரிய அற்புதம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.