வரதட்சணை கேட்காத மாப்பிள்ளை வேண்டுமா? மகாசக்தி அம்மனை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.

ஈரோடு மாவட்டம், கெட்டி சமுத்திரம் மகாசக்தி அம்மன், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மனத்துயர்களைப் போக்கும் அற்புதத் தெய்வமாக விளங்கி வருகிறாள்.


ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து அந்தியூர் வழியே வெள்ளித்திருப்பூர் செல்லும் பேருந்து பாதையில், பாதையின் அருகிலேயே அமைந்திருக்கும் கெட்டி சமுத்திரம் ஆதிரெட்டியூர் மையப்பகுதியில் இந்த மகாசக்தி உமையவளின் கோயில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

தை அமாவாசை தினத்தன்று துவங்கி, பத்து நாட்கள் இங்கே திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. அந்தப் பத்து தினங்களும் பிற மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் இங்கே குடும்பத்தோடு வருகை தந்து மகாசக்தியின் திருவருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.

கொங்கு நாட்டில் அமைந்துள்ள மிக முக்கியமான அம்பாள் திருக்கோயில்களில் இந்த ஆலயம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் இங்கே வருகை தருகிறார்கள் என்பதோடு குறிப்பாக தை மாதத்தில் பெண் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும்.

ஆறு திருக்கரங்களுடன், ஒன்பது அடி உயரத்தினளாக அருட்காட்சி தரும் அம்பிகை மகாசக்தி, பல குறுநில மன்னர்களால் பலவேறு காலகட்டங்களில் குலதெய்வமாகவே வணங்கப்பட்டு வந்திருக்கிறாள். அம்பாளின் கருவறை கரும்பளிங்குக் கற்களால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டு நவீனப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. தெய்வாம்சம் குடிகொண்டிருக்கும் கருவறைக்குள் நாம் இந்த உமா மகேஸ்வரியைக் காணும்போதே நம் மனத்துயரெல்லாம் முற்றிலும் மறைந்துவிட்ட நிம்மதி ஏற்படுகிறது. அன்னை மூன்று கண்களோடும், காதுகளில் குண்டலங்கள் ஜொலிக்க, அபய கரத்துடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றைத் தாங்கி, புன்னகையுடன் சாந்தஸ்வரூபிணியாக அருட்பாலிக்கிறாள்.

தமிழ்நாட்டிலேயே வேறு எங்குமே நடைபெறாத மூலிகை அபிஷேக நீராட்டு, இங்கே வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுகிறது. ஆலயத்திற்கு அருகில் இருபது கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளிலிருந்து கொய்து வரப்படும் அபூர்வமான 108வகை மூலிகைகளைக் கொண்டு இந்த அபிஷேக நீராட்டு நடத்தப்படுகிறது. இந்த அபிஷேகத்தை வந்து பார்க்கும் பக்தர்களுக்கு ராகு-கேது தோஷம் நிவர்த்தியாகிறது என்று சொல்கிறார்கள். தன்னை நாடி வரும் பக்தர்களின் சகல கிரக தோஷங்களையும், மனச்சங்கடங்களையும் அன்னை மகாசக்தி போக்கி அருள்கிறாள் என்று பக்தர்கள் நன்றியால் நெஞ்சுவிம்மச் சொல்கிறார்கள்.

தை அமாவாசைக்கு முன்தினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலில் இருந்து இருபது கி.மீ. தூரத்திலுள்ள வனப்பகுதிக்கு நடந்தே சென்று, வனத்தின் மையப்பகுதியில் பளிங்கு போன்ற தூய சிற்றோடையிலிருந்து தூய நீரைக் குடங்களில் எடுத்து வந்து அபிஷேக நீராட்டு நடத்தும் அற்புதக் காட்சி, காண்பவர் நெஞ்சை விட்டு என்றுமே அகலாது. வனப்பகுதியில் ஓடை நீரில் குளிரை பொருட்படுத்தாமல் குளித்து, ஈர உடையுடன் தீர்த்தக் குடங்களை பக்தர்கள் சுமந்து வரும் பேரழகு வர்ணனைக்கு அப்பாற்பட்டது.

திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை வரம் கேட்பவர்களும், வேறு பிற கோரிக்கைகளை மனதில் கொண்டிருப்பவர்களும் இங்கே வந்து தீர்த்தக் குடமெடுத்து இந்த அன்னைக்கு ‘நேர்த்திக் ்கடன்’ செலுத்துகிறார்கள்.

விரும்பிய வேலை கிடைக்கவில்லையா, உடல்நலப் பிரச்னையா, குழந்தைகளுக்கு கல்வியில் அக்கறையோ தேர்ச்சியோ இல்லையா, பெண் குழந்தைகள் சரியான வயதில் பருவமடையவில்லையா, எந்தப் பிரச்னை இருந்தாலும் இந்த மகாசக்தியின் ஆலயத்துக்கு வந்து வழிபட்டாலே அனைத்தும் தீர்ந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பகுதியில், பத்து வயதுப் பெண் ஒருத்திக்கு கண் பார்வை குறைபாடு இருந்தது என்றும், அவள் இந்த அன்னையின் கோயிலுக்கு வந்து வேண்டிய பிறகு அவளுக்கு கண் நோய் முழுமையாகச் சரியாகி விட்டது என்றும் சொல்லப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கும் இங்கே மந்திரித்த தீர்த்தம் தரப்படுகிறது. தை மாதத்தில் தீ மிதித்தல், கரகாட்டம், கத்தியுடன் நடத்தல், முளைப்பாரி எடுத்தல் போன்ற விழாக்கள் வெகு சிறப்பாக இங்கே கொண்டாடப்படுகின்றன. இந்த மகாசக்தி கோயிலில் தனித்தனியே துர்க்கை அம்மனுக்கும், மாரியம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சந்நதிகள் அமைந்துள்ளன.

இந்த மகாசக்தி அம்மனை இவ்வூர் மக்கள் தங்களது சொந்தத் தாயாகவே நினைப்பதால் தாய் வீட்டில் நிகழ்த்துவதுபோலவே இந்த அம்மனின் சந்நதியில் தங்களுடைய வளைகாப்பு விசேஷத்தை நிகழ்த்துகின்றனர். அதனால் இந்த அம்பாளின் சந்நதி, பெண்களுக்கெல்லாம் தாய் வீடாகத் திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த அம்மனை இங்கே வந்து வழிபடும் பெண்களுக்கு வரதட்சணை கோராத மாப்பிள்ளைகள் கிடைப்பதாகவும் சொல்கிறார்கள்! அதனால் இந்தக் கோயிலில் மணமான தாய்மை எய்தாத பெண்கள் கூட்டத்தைவிட, நல்ல மணமகன் வேண்டி வரும் கன்னியர் கூட்டமே அதிகமாகக் காணப்படுகிறது!

ஆண்டுதோறும் பல்வேறு விழாக்களும் இங்கே நடைபெறுகின்றன. தை மாதம் தொடர்ந்து, மாசி மாதம் மகா சிவராத்திரி, பிறகு பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழா. சித்திரை மாதத்தில் அன்னதானப் பெருவிழா, ஆடி மாதத்தில் பொங்கல் விழா போன்றவை விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இக்கோயிலுக்கு வந்து உளமாற வழிபட்டால், கஷ்டங்கள் மறையும். கவலைகள் தீரும். கடன் தொல்லை நீங்கும். புத்திரப்பேறு உண்டாகும். மனச்சஞ்சலங்கள் நீங்கி மனத்தெளிவு பிறக்கும். வாழ்வு சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.